துல்சி, மோடக் சாகரை தொடர்ந்து விகார் ஏரி நிரம்பியது

மும்பையில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 3 ஆயிரத்து 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் மாநகராட்சியால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் மும்பை மற்றும் மும்பையை சுற்றியுள்ள மோடக்சாகர், துல்சி, விகார், தான்சா, பட்சா, வைத்தர்ணா ஆகிய ஏரிகளில் இருந்து கிடைக்கிறது.

Update: 2018-07-16 23:03 GMT
மும்பை,

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதில் கடந்த 9-ந்தேதி துல்சி ஏரியும், நேற்று முன்தினம் மோடக் சாகர் ஏரியும் நிரம்பின.

தொடர்ந்து மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வரை மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 644 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்கா பகுதியில் உள்ள விகார் ஏரியும் நிரம்பியது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. மழைக்காலம் தொடங்கிய 1½ மாதத்திற்குள் 3 ஏரிகள் நிரம்பியது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீதமுள்ள ஏரிகளும் விரைவில் நிரம்பும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்