மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாரம்பரிய விளையாட்டு ஆகஸ்டு 13-ந்தேதி வரை நடக்கிறது
பாரம்பரிய விளையாட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
சென்னை,
சென்னை பெருநகரின் புகழை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் சென்னை வாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கிரிட்டா நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய விளையாட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. ஆகஸ்டு 13-ந் தேதி வரை விளையாட்டு நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பல்லாங்குழி, பரமபதம், ஆடு புலி ஆட்டம், கட்டம் விளையாட்டு, நட்சத்திர விளையாட்டு, நாலு கட்ட தாயம், டயர் ஓட்டுவது ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் நடந்தன. இதில் 75 பயணிகள் கலந்து கொண்டனர்.
இன்று (செவ்வாய்கிழமை) கிண்டி, வடபழனி மற்றும் நங்கநல்லூர் ரோடு ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரையிலும், மற்ற அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பாரம்பரிய விளையாட்டு நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் வினிதா சித்தார்த்தா ஆகியோர் செய்து வருகின்றனர்.