சாலையில் நடந்து சென்ற வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
சாலையில் நடந்து சென்ற வாலிபரை கத்தியால் வெட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை அரும்பாக்கம், என்.எஸ்.கே நகர், 21-வது தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு நள்ளிரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே சென்றபோது, 2 மோட்டார்சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் அருணிடம் சென்று உதவி கேட்பது போல், பேச்சு கொடுத்தனர்.
கத்தியால் வெட்டினர்
திடீரென அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருணின் தலையில் பலமாக வெட்டினர். இதில் வலியால் அவர் அலறி துடித்தார். பின்னர் அருண் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
தலையில் வெட்டுக்காயம் அடைந்த அருண் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசில் அருண் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.