திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்த தொழிலாளி கைது
திருமுல்லைவாயலில் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
ஆவடி,
திருமுல்லைவாயல் வடக்கு முல்லை நகரை சேர்ந்தவர் ராதிகா (வயது 38). இவர் சில நாட்களுக்கு முன் சென்னை கே.கே. நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அங்கு கட்டிடத்துக்கு பெயிண்ட் அடிப்பதற்காக போரூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கிற லோகேஸ்வரன் (28) என்ற வாலிபர் வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சுரேஷ், ராதிகாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறினார். அதற்கு ராதிகா, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், தன்னால் திருமணம் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
கழுத்தை அறுத்தார்
எனினும் விடாத சுரேஷ், ராதிகாவிடம் தன்னை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் ராதிகாவின் கழுத்தில் அறுத்து விட்டு தப்பி ஓடினார்.
இதில் ராதிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சுரேசை கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.