தமிழக விவசாயிகள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

“தமிழக விவசாயிகள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது“ என்று நாகர்கோவிலில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Update: 2018-07-16 23:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில், மத்திய அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று நடந்தது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:-

மத்திய அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கென முக்கிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையை சுமார் ரூ.100 கோடி செலவில் இரட்டைவழி தேசிய நெடுஞ்சாலையாக அமைக்க திட்டம் உள்ளது.

குமரி மாவட்டத்தில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் வர்த்தக துறைமுகம் அமைக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதை ஒருசிலர் தவறான கண்ணோட்டத்தில் எதிர்த்து வருகின்றனர். குமரியில் வர்த்தக துறைமுகம் அமைவதால் உலக அளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும். இதற்காக கொழும்பு, சிங்கப்பூர் துறைமுகங்களை நாடவேண்டிய தேவை இருக்காது.

தமிழக அரசு குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவற்கு தடையாக இருப்பது அரசியல் கட்சியினர் அல்ல.

வன்முறை, கலவரம் போன்றவற்றை உருவாக்க வேண்டும், அதன்மூலம் திட்டத்தை தடுக்க வேண்டும் என செயல்பட்டு வருபவர்களைத்தான் நான் எதிர்க்கிறேன். தமிழகத்தில் கல்வி, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

விவசாயத்தை அழிப்பது மத்திய அரசின் இலக்கல்ல. ஏனெனில், எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.11 லட்சம் கோடியை விவசாயிகளுக்கு வங்கி கடனாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையையும் பலமடங்கு உயர்த்தி உள்ளது. விவசாயிகளை உயர்த்தவேண்டும் என்றால் அவர்களின் உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த வேண்டும். அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அதை மனதில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. 150 ஆண்டு கால காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு தந்தது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுதான்.

இதுதவிர ஆண்டுக்கு 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு கொண்டுவரவும் திட்டம் வகுத்துள்ளது. இதற்கான கூட்டம் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்று நீரை தமிழகத்துக்கு தரவேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும்போது ‘தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை‘ என்றே கூறினார். இதில் இருந்தே தமிழக விவசாயிகளின் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை அறிந்துகொள்ளமுடியும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

கூட்டத்தில், பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான் பதிலளித்தபோது ‘முட்டை வினியோக ஊழல் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்த வேண்டும்‘ என்று கூறினேன்.

‘தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்‘ என்பதைத்தான் ‘மொட்டை அடிக்கப்படுகிறார்கள்‘ என்றேன். எனவே நான் பேசியதன் கருத்தை புரிந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டும். தமிழகம் ஊழல் மையமாக மாறிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்