‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நேதாஜி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்படும் கடைகளை ஏலம் விடக்கூடாது குறைதீர்வு நாள் கூட்டத்தில், வியாபாரிகள் மனு
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நேதாஜி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்படும் கடைகளை ஏலம் விடக்கூடாது. இதுதொடர்பாக மாநகராட்சி சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று வியாபாரிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 445 மனுக்கள் கொடுத்தனர்.
வணிகர் சங்க பேரமைப்பு வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு மற்றும் நிர்வாகிகள், வியாபாரிகள் அளித்த மனுவில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நேதாஜி மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டப்பட உள்ளது. அவற்றை ஏலம் விடக்கூடாது. ஏற்கனவே அங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதமுள்ள கடைகளை ஏலம் விட வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வாலாஜா தாலுகா கீழ்மின்னல் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவர்கள் அளித்த மனுவில், நாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வில் சிலர் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து நடந்த சிறப்பு தேர்வை எழுதி உள்ளோம். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் மீண்டும் எங்களை சேர்க்க மறுக்கின்றனர். எங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் அதே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ரேவதி தனது 2 மகன்களுடன், கொடுத்த மனுவில், எனது கணவர் விஜய் ஆனந்தராஜி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களால் எனக்கும், எனது குழந்தைகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வேலூரில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த வேலூர் கன்சால்பேட்டையை சேர்ந்த முனுசாமியின் மனைவி மல்லிகா உள்பட 2 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையை மனு வழங்கிய உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் வழங்கினார்.
இதில், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன், உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.