அரிசி, மண்எண்ணெய் முறையாக வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் ரேஷன் கார்டுகளை கீழே வீசி எறிந்ததால் பரபரப்பு

ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து குடியாத்தம் அருகே வி.டி.பாளையம் கிராம மக்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ரேஷன் கார்டுகளை கீழே வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-16 23:30 GMT
வேலூர்,


வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றை மனுவாக எழுதி கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

குடியாத்தம் தாலுகா பரதராமி அருகே உள்ள வி.டி.பாளையம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடையில் அரிசி, மண்எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களுடைய ரேஷன் கார்டுகளை தரையில் வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கிராம மக்கள் இதுதொடர்பாக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 5 பேரை மட்டும் உள்ளே சென்று மனு அளிக்க அனுமதித்தனர். தொடர்ந்து கிராம மக்கள் 5 பேர் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-


எங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வரும் ஏழை, எளிய மக்கள் ஆவார்கள். எங்கள் கிராமத்தில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையில் கடந்த 6 மாதங்களாக அரிசி, மண்எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை. முதலில் வரும் சிலருக்கு மட்டுமே பொருட்கள் கிடைக்கிறது. எனவே ரேஷன் கடையின் முன்பாக வரிசையில் நிற்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும் மாதந்தோறும் சுமார் 50 ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி உள்ளிட்ட எந்த பொருட்களும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டால், கடைக்கு குறைந்த அளவு பொருட்களே வருகிறது என்று கூறுகிறார். ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பல குடும்பங்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரேஷன் பொருட்கள் அனைத்தும் கிராம மக்களுக்கு கிடைக்க வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


மேலும் செய்திகள்