கோவில் திருவிழாவில் மோதல்; 20 பேர் கைது போலீஸ் குவிப்பு

மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-07-16 23:00 GMT
வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி ஊராட்சி ஆவாரம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குவதாக இருந்தது. இதற்காக கோவிலில் இருந்து கரகம் பாலிப்பதற்காக ஒரு தரப்பினர் தாரை, தப்பட்டையுடன் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாரை, தப்பட்டை அடித்து செல்லக்கூடாது என்று மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கிருந்த ஒரு தரப்பினர் திடீரென நின்றிருந்த வாகனங்களின் கண்ணாடிகளையும், கோவில் அருகே இருந்த நாற்காலிகளையும் உடைத்ததுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கிழித்தனர். ஒலிபெருக்கியையும் தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி மற்றும் வையம்பட்டி இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்டதாக 20 பேரை பிடித்து வையம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் 20 பேரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிரச்சினை மேலும் அதிகரிக்கவே போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனால், திருவிழா பாதியில் நின்றது.

இதையடுத்து நேற்று காலை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், கூடுதல் துணை சூப்பிரண்டு சீனிவாசன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் பொன்.ராமர், மணப்பாறை தாசில்தார் தனலட்சுமி மற்றும் போலீசாரும், வருவாய் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று திருவிழா நடத்தும் ஒரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது திருவிழாவை நடத்தும் தரப்பினர் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாலையோரத்தில் இறக்கி வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்களை கோவிலுக்கு எடுத்துச் சென்று திருவிழாவை நடத்துவதற்கு சம்மதிக்கிறோம். மேலும் வருகிற 24-ந் தேதி நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்பு புறம்போக்கு நிலங்களை அளந்து ஆக்கிரமிரப்புகளை அகற்றும் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் வரை எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் என்று எழுதிக் கொடுத்ததை அடுத்து போலீசார் திருவிழா நடத்திட அனுமதி வழங்கினர்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூஜை பொருட்களுடன் ஒரு தரப்பினர் தாரை, தப்பட்டை முழங்க சென்ற போது குறிப்பிட்ட இடத்தில் தாரை, தப்பட்டை அடிக்க கூடாது என்று கூறி மற்றொரு தரப்பை சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களை தடுக்க முயன்றனர். இதனால், மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிரச்சினை செய்த பெண்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் கரகம் பாலிக்கப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

இந்நிலையில், திருவிழா நடத்தி வரும் ஒரு தரப்பை சேர்ந்த முருகன் என்பவர் வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆவாரம்பட்டியை சேர்ந்த அந்தோணிசாமி (வயது 55) என்பவர் உள்ளிட்ட 20 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த திருவிழாவில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஆவாரம்பட்டி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்