பள்ளி வேனில் தீப்பிடித்த 45 மாணவர்கள் பத்திரமாக மீட்பு
வத்தலக்குண்டு அருகே தீப்பிடித்த பள்ளி வேனின் கண்ணாடியை உடைத்து 45 மாணவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலக்குண்டு,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பரசுராமபுரத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேனில், 45 மாணவ-மாணவிகள் வத்தலக்குண்டு நோக்கி நேற்று மாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். வேனை, உச்சப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டினார்.
வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் புகைமூட்டமாகி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் வேனை சாமர்த்தியமாக சாலையோரத்தில் நிறுத்தினார்.
வேனில் தீப்பிடித்ததை கண்ட மாணவ-மாணவிகள் அலறியபடி கதறி அழுதனர். டிரைவர் முத்துக்குமாரும் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
என்ஜின் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் அணைத்தனர். மேலும் வேனுக்குள் சிக்கிய மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, வேனில் உள்ள அவசர வழி கதவை பொதுமக்கள் திறக்க முயன்றனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. அந்த கதவின் குறுக்கே கம்பியை வைத்து ‘வெல்டிங்‘ வைக்கப்பட்டிருந்தது.
இதனால் வேனின் பின்பக்க கண்ணாடியை உடைத்து மாணவர்களை பொதுமக்கள் மீட்டனர். இதில் சின்னுபட்டியை சேர்ந்த ஜான் (வயது 5) என்ற மாணவனின் தலையில் கண்ணாடி குத்தியதால் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே மீட்கப்பட்ட மாணவ-மாணவிகளை வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பொதுமக்கள் ஆசுவாசப்படுத்தினர்.
அதன்பின்னர் பள்ளிக்கு சொந்தமான மற்றொரு வேனில் அவர்களை ஏற்றி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் மற்றும் பொதுமக்களின் துரித செயல்பாட்டினால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தனியார் பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வு செய்யாததால், இதுபோன்ற தீ விபத்து ஏற்படுகிறது. எனவே பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். இதேபோல் பள்ளி நிர்வாகமும் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.