16 சதவீதம் சிறப்புக்கூறு நிதியை தந்ததே நான்தான் - ரங்கசாமி விளக்கம்
16 சதவீதம் சிறப்புக்கூறு நிதியை தந்ததே நான் தான் என்று சட்டசபையில் ரங்கசாமி தெரிவித்தார்.;
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. (காங்) எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–
தீப்பாய்ந்தான்: அட்டவணை இன மக்களுக்காக சிறப்புக்கூறு நிதி திட்டத்தை இந்திராகாந்தி கொண்டு வந்தார். இதன்படி சிறப்புக்கூறு நிதியாக 16 சதவீத நிதி அந்த மக்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால் இந்த திட்டம் கடந்த ஆட்சியில் நிராகரிக்கப்பட்டது.
ரங்கசாமி: கடந்த ஆட்சியில் சிறப்புக்கூறு நிதியாக 16 சதவீதம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை புதுச்சேரிக்கு கொண்டு வந்ததே நான்தான்.
தீப்பாய்ந்தான்: கடந்த மார்ச் மாதம் நடந்த மறுஆய்வு கூட்டத்தின்போது சிறப்புக்கூறு நிதி ரூ.37 கோடி செலவிடப்படாமல் இருந்தது? இதற்கு யார் காரணம்? சம்பந்தப்பட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை? தற்போதைய பட்ஜெட்டில் சிறப்புக்கூறு திட்டத்துக்கான நிதி ரூ.514 கோடி எங்கே போனது?
அமைச்சர் நமச்சிவாயம்: இதனை மானிய கோரிக்கையின்போது பேசினால் நல்லது.
அன்பழகன்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு செய்யும் துரோகத்தை அவர் பட்டியலிடுகிறார். இதற்கு காரணமான நிதித்துறை செயலாளரை சபாநாயகர் முன்பு அமைச்சர் புகார் கூறியபோதே அழைத்து பேசி இருக்கவேண்டும்.
சபாநாயகர் வைத்திலிங்கம்: நீங்கள் மதிப்பீட்டு குழுவின் தலைவர்தானே. நீங்களே அழைத்து பேசுங்கள்.
அன்பழகன்: சபாநாயகர் முதல்–அமைச்சராக இருந்தபோதும், ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்தபோதும் சிறப்புக்கூறு தனியாக ஒதுக்கி பட்ஜெட் போடப்பட்டது.
அமைச்சர் கந்தசாமி: இப்போது 16 சதவீத நிதி தொடர்பாக விமர்சித்து சில அமைப்புகள் கண்டன சுவரொட்டி அடிக்க இருந்தனர். நான்தான் அவர்களை அழைத்து பேசி நிலைமையை விளக்கினேன். எனவே சபாநாயகர் இதுதொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டும்.
சபாநாயகர் வைத்திலிங்கம்: இதில் நான் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. யாராவது புகார் கொடுத்தால் துணை சபாநாயகர் தலைமையிலான உரிமைக்குழுவிற்கு அனுப்பி விசாரிக்க சொல்லலாம்.
முதல்–அமைச்சர் நாராயணசாமி: தாழ்த்தப்பட்டோருக்கான திட்டங்களுக்கு 16 சதவீத நிதி வழங்குவதில் உறுதியாக உள்ளோம். அதை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தெரிவிப்போம்.
டி.பி.ஆர்.செல்வம் (என்.ஆர்.காங்): எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கு பெட்டி கொடுத்தோம் என்று தவறான பொருள்படும்பேசி நீங்கள் பேசி உள்ளீர்கள்.
அமைச்சர் கமலக்கண்ணன்: பட்ஜெட் புத்தகத்தை பெட்டியுடன் கொடுத்ததைத்தான் அவர் கூறினார்.
அமைச்சர் கந்தசாமி: நிதித்துறை செயலாளரின் செயல்பாடு குறித்து கவர்னரிடமும் கூறியுள்ளேன். அவரை மாற்ற கேட்டுள்ளேன். இதற்கு மேலும் அவரது செயல்பாடு சரியில்லை என்றால் போராடும் நிலை வரும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.