திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி தீர்த்தவாரி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி நேற்று அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

Update: 2018-07-16 23:30 GMT
திருவண்ணாமலை,

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 7-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். கொடியேற்றம் நடந்த அன்று அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடந்தது.

அதன்பின் தினமும் காலையும், மாலையும் சந்திரசேகர் மற்றும் விநாயகர் வீதி உலா நடந்தது. இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று காலை மாட வீதியில் சந்திரசேகர் வீதியுலா நடந்தது.

இதையடுத்து அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அய்யங்குளம் முன்பு உள்ள மண்டபத்தில் சந்திரசேகரர் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனை நேரில் கண்டு தரிசனம் செய்வதற்காக அய்யங்குளத்தை சுற்றி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


இதனை தொடர்ந்து சந்திரசேகரருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் சிவாச்சாரியார்கள் சாமியிடம் இருந்து சூலத்தை எடுத்து சென்று அய்யங்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடத்தினர். அதன் பின் சிவாச்சாரியார்கள் சூலத்தை சாமியிடம் வைத்தனர். தொடர்ந்து அய்யங்குளம் எதிரே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சந்திரசேகரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் கோவில் ஆனி பிரம்மோற்சவ கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்