வார்தா புயலில் சேதம் அடைந்த உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பேரம்பாக்கத்தில் வார்தா புயலில் சேதம் அடைந்த உயர்மின் கோபுர விளக்கை சீரமைத்து, மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-07-16 22:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் பெருமாள் கோவில் எதிரே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் செலவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட வார்தா புயலில் சிக்கி அந்த உயர்மின் கோபுர விளக்கு மின்கம்பம் கீழே விழுந்தது. அதில் இருந்த மின்விளக்குகளும் சேதம் அடைந்தன.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சேதமடைந்த உயர்மின் கோபுர விளக்கு இன்னும் சீரமைக்கப்படவில்லை. தற்போது அந்த உயர்மின் கோபுர விளக்கு மின்கம்பம் பெருமாள் கோவில் அருகே சாலையோரம் பயனற்ற நிலையில் கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் இந்த உயர்மின் கோபுர விளக்குக்கு செல்லும் மின்இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் திறந்தபடி உள்ளது. அதன் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி மாணவர்கள் அந்த வழியாக சென்று வரும்போது பாதுகாப்பு இல்லாமல் திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டியில் கை வைத்து விட்டால் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே பயனற்று கிடக்கும் உயர்மின் கோபுர விளக்கு மற்றும் மின் இணைப்பு பெட்டியை சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் உயர்மின் கோபுர விளக்கை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்