147 வீடுகள் இடிக்கப்பட்டன ‘சொந்த ஊரிலேயே அகதிகளாகி விட்டோம்’ பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்
சிதம்பரத்தில் நேற்று 3-வது நாளாக நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் 147 வீடுகள் இடிக்கப்பட்டது. இந்த நிலையில் சொந்த ஊரிலேயே அகதிகளாகி விட்டோம் என்று வீடுகளை இழந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் தில்லை காளியம்மன் ஓடை உளளது. இந்த ஓடையின் வழியாக தான், பாசிமுத்தான் வாய்க்காலில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் சிதம்பரம் நகரில் சேரும் மழைநீர் வழிந்தோடும். இதனால் நகரின் வெள்ள வடிகாலாக தில்லைகாளியம்மன் ஓடை அமைந்து இருந்தது.
ஓடையின் இரு கரையோர பகுதியிலும் பலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருந்தனர். இதனால் சுமார் 70 முதல் 120 மீட்டர் வரை அகலம் கொண்டதாக இருந்த ஓடை குறுகி 10 மீட்டர் அகலத்துக்கு தற்போது இருந்தது.
இதன் காரணமாக, பருவமழை காலங்களில் வெள்ள நீர் வழிந்தோட வழியின்றி நகரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நின்று வந்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக, வெள்ள பேரிடர் தடுப்பு திட்டத்தின் கீழ் தில்லை காளியம்மன் ஓடை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஓடை பகுதியில் அளவீடு செய்ததில், சுமார் 369 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கு வசித்து வந்தவர்களுக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டு, கடந்த 15-ந்தேதி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக நடந்த பணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நேற்று 3-வது நாளாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்தனர். அதன்படி ஓடையையொட்டி அமைந்துள்ள குமரன் தெரு, சி.கொத்தங்குடி, அண்ணாதெரு, கோவிந்தசாமி தெரு ஆகிய பகுதிகளில் நடந்தது. 9 பொக்லைன் எந்திரங்களை கொண்டு மாடிவீடுகள், குடிசைவீடுகள் என்று ஓடை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த அனைத்து வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. தாங்கள் குடும்பத்துடன் இத்தனை காலம் வாழ்ந்து வந்த வீடுகள், கண் எதிரே இடிக்கப்படுவதை பார்த்து பலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று 147 வீடுகள் இடிக்கப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீடுகளை இழந்தவர்கள் தங்களது உடைமைகளுடன் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். பலர் தங்களது குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல், சோகத்துடன் சாலையோரம் அமர்ந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள் பள்ளி சீருடை அணிந்து, பள்ளிக்கு செல்லாமல் சாலையோரம் அமர்ந்து தாங்கள் வசித்த வீடு இடிக்கப்படுவதை ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. வீடுகளை இழந்தவர்களில் ஒருசிலர் தெருக்களில் காலியாக கிடக்கும் இடத்தில் பாத்திரங்கள், துணிகள் என்று அனைத்தையும் திறந்த வெளி பகுதியில் போட்டு வைத்துள்ளனர். மேலும் அங்கேயே சமையல் செய்து வருவதுடன், இரவில் தங்களது குழந்தைகளுடன் அவர்கள் தூங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், மாற்று இடம் எதுவும் தராமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், நாங்கள் இரவில் தூங்குவதற்கு கூட இடமில்லாமல் தவிக்கிறோம். இதன் மூலம் இதுநாள் வரையில் நாங்கள் வாழ்ந்து வந்த ஊரிலேயே அகதிகளாக்கி விட்டார்கள்.
குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் எங்களது குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பி வைக்க முடியவில்லை. அவர்களது கல்வி என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலையும் சேர்ந்து இருக்கிறது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.