கலெக்டரின் காரை வழிமறித்து மீனவ கிராம மக்கள் முற்றுகை

பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை தொடர்ந்து, அங்கு பேச்சுவார்த்தை முடித்து திரும்பிய போது கலெக்டரின் காரை மீனவ கிராம மக்கள் வழிமறித்து முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2018-07-16 22:00 GMT
பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே உள்ளது மீனவ கிராமமான புதுக்குப்பம். இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தனியார் அனல்மின் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மின் உற்பத்தி செய்ய தேவையான நிலக்கரி காரைக்காலில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு கொண்டு வரும் நிலக்கரியில் இருந்து துகள்கள் காற்றில் பறந்து, கிராமத்தில் உள்ள வீடுகளின் மீது படிந்து வருவதுடன், குடிநீர் தொட்டி, கிணறுகள் போன்றவற்றிலும் விழுகிறது. இதனால் குடிநீர் கலங்கலாக வருகிறது. மேலும் வீடுகளில் வசிக்கும் மக்கள் சுகாதாரமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், அனல்மின் நிலையத்துக்கு கப்பல் மூலமாக நிலக்கரி கொண்டு வர திட்டமிட்டு, இதற்கென துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நிலக்கரி துகள்களால் பாதிப்புக்கு உள்ளான கிராம மக்களுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் கிராமத்தில் இயங்கும் தனியார் அனல் மின்நிலையத்தை மூடக்கோரியும் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர்.

இதற்கென துறைமுகம் அமைக்கப்பட்டு வரும் இடத்துக்கு அருகே, சாமியானா பந்தல் அமைத்து, அதன் கீழ் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் 5-வது நாளாக நீடித்தது.

ஆனால், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை தொடருவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். நேற்று 6- வது நாள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆண்களும், பெண்களும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வர தயாரானார்கள். அப்போது, அங்கு வந்த அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வர இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் அங்குள்ள ஒரு கோவிலுக்கு வந்தனர்.

காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் தண்டபாணி புதுக்குப்பம் மீனவ கிராமத்துக்கு வருகை தந்தார். பின்னர் அங்கு கிராம மக்களை சந்தித்து, அமைதி பேச்சுவார்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள், இங்குள்ள அனல்மின்நிலையத்தால் எங்களுடைய கிராமத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

நிலக்கரியை கப்பல் மூலம் இறக்குவதற்காக, துறைமுகம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள 700 குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். மக்களின் நலன் கருதி, வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக உடனடியாக இங்குள்ள அனல்மின் நிலையத்தை மூட வேண்டும், மேலும் துறைமுகம் அமைக்கும் பணியையும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

தொடர்ந்து, கலெக்டர் தண்டபாணி பேசுகையில், இது தொடர்பாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள்(அதாவது நாளை) சமாதான கூட்டம் நடத்தி அதன் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து, 5 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, கலெக்டர் தண்டபாணி தனது காரில் அங்கிருந்து புறப்பட்டார். இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பெண்கள் சிலர், ஒன்று சேர்ந்து திடீரென கலெக்டரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். அப்போது உடனடியாக அனல்மின்நிலையத்தை மூட வேண்டும், இந்த பிரச்சினையில் அலட்சியம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பேச்சுவார்த்தையின் போது, பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செல்வி ராம ஜெயம், மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்