அனைத்து தொழிற்சாலைகளிலும் பச்சை தேயிலைக்கு முன்கூட்டியே தேயிலை விலை நிர்ணயம் செய்யப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
மஞ்சூர் அருகே கைகாட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது போன்று அனைத்து கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் முன்கூட்டியே தேயிலை விலைநிர்ணயம் செய்யப்படுமா? என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது பச்சை தேயிலை விவசாயம். இதனை நம்பி சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை சரிவு ஏற்பட்டதால் மாவட்டத்தில் பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் பிழைப்பு தேடி கோவை, திருப்பூர் மற்றும் வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் நிலை உள்ளது. தங்களது குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு கடன்வாங்கும் நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர். இது தவிர பெரும்பாலான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்றும் வருவதும் தெடர்கதையாகிறது. இந்த நிலையில் பச்சை தேயிலைக்கு நிரந்தர தீர்வாக குறைந்த பட்சம் ரூ.30 விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.
இதற்கான தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் வரை தற்காலிகமாக தேயிலை வாரியம் சார்பில் கலெக்டர் தலைமையிலான விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த விலை நிர்ணய கமிட்டி மூலம், மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்தது. இந்த குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாத, தேயிலை தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்திற்கு மாதாந்திர விலையாக தேயிலை வாரியம், 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.12.60 என விலை நிர்ணயம் செய்தது.
ஆனால் இதனை பெரும்பாலான தனியார் தேயிலை தொழிற்சாலைகள் விலை நிர்ணயம் செய்யாமல் குறைந்த விலையைத்தான் நிர்ணயம் செய்தது. இந்த நிலையில் குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாகம் அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கும் ரூ.8 முதல் ரூ.9 வரை விலை நிர்ணயம் செய்தது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் இன்கோசர்வ் நிர்வாகத்திடம் நேரில் சந்தித்து விலையை உயர்த்தி தர கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் குந்தா (எடக்காடு) கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு ஒட்டுமொத்த விவசாயிகள் முதற்கட்டமாக 2 நாட்கள் பச்சை தேயிலையை வினியோகம் செய்யாமல் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதே போன்று மற்ற அனைத்து பகுதி விவசாயிகளும் தங்களது எதிர்ப்பை சம்பந்தப்பட்ட கூட்டுறவு தொழிற்சாலைக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதில் மஞ்சூர் அருகில் முதன்மை கூட்டுறவு தொழிற்சாலையாக விளங்கும் கைக்காட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு மேலூர், மஞ்சக்கம்பை, ஆலட்டனண, மேலூர் ஒசஹட்டி, அரையட்டி ஆறு குச்சி, கைக்காட்டி, கோத்திபன், கோக்கலாடா, பெங்கால், மைனலா, தேனாடு உட்பட சுமார் 20–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தினசரி பச்சை தேயிலையை வினியோகம் செய்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாக தேயிலை வாரியம் நிர்ணயத்த விலையை காட்டிலும் ரூ.3 முதல் ரூ.4 வரை குறைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் ஏஜெண்டுகளிடம் தங்களது பச்சை தேயிலையை வினியோகிக்க தொடங்கினர்.
பெரும்பாலான விவசாயிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு தொழிற்சாலைக்கு பச்சை தேயிலையை வினியோகம் செய்யாததால், குறைவாக வருகின்ற பச்சை தேயிலையை வைத்து தேயிலை உற்பத்தி செய்வதில் உற்பத்தி செலவு அதிகரிப்பதாகவும், நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை தனி அதிகாரி அகிலா சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்து பேசினார். அப்போது, விவசாயிகள் சார்பில் தனியார் தொழிற்சாலைகளுக்கு இணையாக தங்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்யப்பட்டால் மட்டும் இனி பச்சை தேயிலை வினியோகம் செய்வதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தனி அலுவலர் அகிலா, குன்னூர் இன்கோசர்வ் நிர்வாகத்திடம் நேரில் பேசி, இனி வரும் காலங்களில் தேயிலைக்கு நல்ல விலை நிர்ணயம் செய்ய உறுதியளித்தார். மேலும், விவசாயிகள் வினியோகம் செய்யப்படும் பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்வதென தனி அலுவலர் அறிவித்தார்.
இதன் அடிப்படையில் நடப்பு (ஜூலை) மாதம் வினியோகம் செய்யப்படும் பச்சை தேயிலைக்கு ரூ.14 என விலை நிர்ணயம் செய்யப்படும் என்று உறுதியளித்து அதற்கான அறிவிப்பு நோட்டீஸ் தொழிற்சாலை வளாகம் மற்றும் அனைத்து பச்சை தேயிலை மையங்களில் ஒட்டப்பட்டது. மேலும் அனைத்து உறுப்பினர்களும் நல்ல பச்சை தேயிலை வினியோகம் செய்து தொழிற்சாலை நல்ல முறையில் இயங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பால் அந்த பகுதி விவசாயிகள் ஓரளவு திருப்தியடைந்து மீண்டும் பச்சைதேயிலையை வினியோகம் செய்வதாக தெரிகிறது. இதே நடைமுறையை மற்ற கூட்டுறவு தொழிற்சாலைகளும் பின்பற்றினால் தொழிற்சாலை மட்டுமின்றி விவசாயிகள் நலனும் பாதுகாக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும்நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வரலாற்றில் முதன் முறையாக முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.