கூடலூர் அருகே முட்புதரில் மறைத்து வைத்திருந்த 40 கிலோ கஞ்சா போலீசார் கைப்பற்றி விசாரணை
கூடலூர் அருகே முட்புதரில் மறைத்து வைத்திருந்த 40 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.;
கூடலூர்,
கூடலூர்–கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செல்வபுரம் பிரிவு அருகே முட்புதரில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் உத்தரவின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது முட்புதரில் தலா 2 கிலோ எடை கொண்ட 20 பார்சல்களில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை மறைத்து வைத்த மர்ம நபர்கள் யாரென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.