வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: சோலையார் அணை 2–வது முறையாக நிரம்பியது

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் சோலையார் அணை 2–வது முறையாக நிரம்பியது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.;

Update: 2018-07-16 22:00 GMT

வால்பாறை,

வால்பாறையில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த மே மாதம் இறுதி வாரத்தில் தொடங்கிய இந்த மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை குறைந்த போதும் நள்ளிரவு நேரங்களில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால் வால்பாறை பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மண்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 12.30 மணியளவில் அரசு பஸ் டெப்போவிற்குள் மழைத்தண்ணீர் புகுந்தது. இதனால் டெப்போவில் உள்ள அலுவலகத்திற்குள் கண்டக்டர்கள் டிரைவர்கள் செல்லமுடியாமல் தவித்தனர்.

இதனை தொடர்ந்து வால்பாறை நகராட்சி கமி‌ஷனர் (பொ) ராஜகோபால் தலைமையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் டெப்போவிற்குள் உள்ள தண்ணீரை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதேபோல வால்பாறை தீயணைப்புத்துறையினரும் டெப்போவில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மழை காரணமாக பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையார் அணை ஜூலை மாதம் 1–ந் தேதியில் இருந்து முழு கொள்ளளவான 160 அடியை தாண்டிய நிலையிலேயே இருந்து வருகிறது. கடந்த வாரம் 11–ந் தேதி கூடுதல் மழை பெய்ததால் அணையின் பாதுகாப்பு கருதி நள்ளிரவு 2 மணி முதல் காலை 10 மணிவரை அணையின் மதகு வழியாக கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டேயிருந்ததால் சோலையார் அணை நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக கோவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் நேற்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டது.

வால்பாறை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் சோலையார் அணையில் 114 மி.மீ. மழையும், வால்பாறையில் 108 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 188 மி.மீ. மழையும், நீராரில் 104 மி.மீ. மழையும் பெய்துள்ளது. சோலையார் அணைக்கு வினாடிக்கு 8689.70 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோலையார் அணையிலிருந்து சேடல் பாதை வழியாக 4758.45 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. சோலையார் அணையிலிருந்து மாற்றுப்பாதை வழியாக 2041.32 கன அடிதண்ணீரும் பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

சோலையார் மின்நிலையம்–2 இயக்கப்பட்டு 602.08 கனஅடி தண்ணீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. சோலையார் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் 164.70 அடியை எட்டியதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு நலன்கருதி நள்ளிரவு 1 மணிக்கு சோலையார் அணை திறக்கப்பட்டு மதகு வழியாக 253.13 கனஅடி தண்ணீர் கேரளாவிற்கு விடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்