இலவச பஸ் பாஸ் வழங்காததை கண்டித்து 21-ந்தேதி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம்

அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்காததை கண்டித்து வருகிற 21-ந்தேதி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.;

Update: 2018-07-16 21:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அனைத்து பிரிவு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால், தற்போது காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

சமீபத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில், அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் அரசு போக்குவரத்து கழகம் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதால் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்திற்கு 75 சதவீத நிதியை அரசு வழங்கும் என்றும், மீதி 25 சதவீதத்தை மாணவ, மாணவிகள் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

குமாரசாமியின் இந்த அறிவிப்புக்கு மாணவ, மாணவிகளும், பெற்றோர் மற்றும் மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறந்து 2 மாதங்கள் ஆகியும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படாததால், அவர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

இதனால் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இலவச பஸ் பாஸ் வழங்காததை கண்டித்து வருகிற 21-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளை அடைத்து, வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என்று ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதற்கு மற்ற மாணவ அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்