ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற போது விசைப்படகில் மயங்கி விழுந்த மீனவர் சாவு

கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது விசைப்படகில் மயங்கி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2018-07-16 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் பகுதியை சேர்ந்தவர் சில்வெஸ்டர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஈத்தாமொழி பெரிய வடக்குதெருவை சேர்ந்த கஸ்மிர் (வயது53) உள்பட 10 மீனவர்கள் நேற்று அதிகாலையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, கஸ்மிர் திடீரென மயங்கி படகில் விழுந்தார். இதை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மயங்கி விழுந்த கஸ்மிரை மீட்டு அவசரம் அவசரமாக கரைக்கு திரும்பினர்.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கரை சேர்ந்ததும், அவரை அருகில்  உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கஸ்மிர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் கஸ்மிரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து இறந்தவர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கஸ்மிரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்