மராட்டியத்தில் காணாமல் போன 2,264 பெண்கள் மீட்கப்படவில்லை

மராட்டியத்தில் மாயமான 2 ஆயிரத்து 264 பெண்கள் மீட்கப்படவில்லை என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

Update: 2018-07-15 23:53 GMT
மும்பை,

மராட்டியத்தில் காணாமல் போன பெண்கள், சிறுமிகள் குறித்த விவரங்களை நாக்பூரில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேட்டு இருந்தார். இதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில் உள்ள தகவலின்படி கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மராட்டியத்தில் 26 ஆயிரத்து 708 பெண்கள் மாயமாகி உள்ளனர். இதில் 5 ஆயிரத்து 56 பேர் சிறுமிகள்.

மாயமானவர்களில் 24 ஆயிரத்து 444 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 264 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் முழுநேர உள்துறை மந்திரி இல்லாததால் தான் சட்ட ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். மேலும் அவர்கள் முழு நேர உள்துறை மந்திரியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த பிரச்சினை மேல்-சபையிலும் எதிரொலித்தது. அங்கு எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முன்டே கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளாக முழு நேர உள்துறை மந்திரியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதல்-மந்திரி கட்சி பணி, அறிவிப்புகளை வெளியிடுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கை எல்லாம் அவர் ஒரு ஓரமாக வைத்து உள்ளார்’ என்றார். 

மேலும் செய்திகள்