ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: கைது நடவடிக்கையை போலீசார் நிறுத்த வேண்டும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களை தொடர்ந்து கைது செய்வதை போலீசார் நிறுத்த வேண்டும் என்று அகில இந்திய சி.ஐ.டி.யு. தலைவர் ஹேமலதா கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து பல்வேறு விதிமுறையை மீறி செயல்பட்டது. இந்த ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பாவி இளைஞர்களையும், மாணவர்களையும் கைது செய்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த 1½ மாதங்களுக்கு பிறகும் பொதுமக்களிடம் அச்சம் நீடித்து வருகிறது. ஆகையால் போலீசார் அடக்கு முறைகள் மற்றும் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை விரைவாக வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் நலச்சட்டங்களையும் முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றி வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் சி.ஐ.டி.யு. சார்பில் செப்டம்பர் மாதம் 5–ந் தேதி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சம ஊதியம் மற்றும் சமமான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது.
அதே போன்று விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்து போராடி வருகின்றனர். அவர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9–ந் தேதி நாடு தழுவிய சிறைநிரப்பும் போராட்டம் நடத்துகின்றனர். இதில் சி.ஐ.டி.யு. பங்கேற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சி.ஐ.டி.யு. பேரவை கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ரசல் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் கருமலையான், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய தலைவர் ஹேமலதா கலந்து கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை ஹேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.