2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
சாணார்பட்டி அருகே, 2 மகன்களுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்பட்டி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பாலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 31). எலக்ட்ரீசியன். அவருடைய மனைவி நாகஜோதி (26). இவர்களுக்கு லோகேஷ் (7), நிகரேஷ் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் லோகேஷ் 2-ம் வகுப்பும், நிகரேஷ் 1-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் நாகஜோதி அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகன்களை யார் பார்த்து கொள்வார்கள் என நினைத்து கவலை அடைந்தார்.
இதையடுத்து மகன்களை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தார். சம்பவத்தன்று மனதை கல்லாக்கிக் கொண்டு தனது 2 மகன்களுக்கும் நாகஜோதி விஷத்தை கொடுத்தார். பின்னர் அவரும் அந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் வாயில் நுரை தள்ளியபடி 3 பேரும் வீட்டில் மயங்கி கிடந்துள்ளனர்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், நாகஜோதி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகஜோதி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து லோகேஷ், நிகரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.