காங்கிரஸ் ஆட்சி வராமல் இருந்தால் அரசு திவாலாகி இருக்கும் - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி வராமல் இருந்தால் அரசு திவாலாகி இருக்கும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2018-07-15 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று காமராஜரின் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவுக்கு காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு காமராஜரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் முதல்–அமைச்சர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் தேவதாஸ், நீல.கங்காதரன், ஏ.கே.டி.ஆறுமுகம், சாம்ராஜ், இளையராஜா, வீரமுத்து, செல்வகணபதி, சூசைராஜ், தனுசு, எம்.ஏ.கே.கருணாநிதி, சூசைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–

அரசியல் தலைவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் காமராஜர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் இருந்து வழிகாட்டியுள்ளார். காங்கிரஸ் பேரியக்கத்துக்கு நம்பிக்கை ஊட்டிய தலைவர் அவர்.

கட்சி நமக்கு என்ன செய்தது? என்பதைவிட கட்சிக்கு நாம் என்ன செய்தோம் என்று நினைக்கும் தொண்டர்கள் உள்ள இயக்கம் காங்கிரஸ். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி வழியில் ராகுல்காந்தி உயிரை துச்சமென மதித்து இந்த நாட்டுக்காக பாடுபட்டு வருகிறார். அதனால்தான் மக்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம். இந்தியாவில் தொடர்ந்து 40 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பெருமை காங்கிரஸ் இயக்கத்துக்கு உண்டு. அதுபோல் வேறு எந்த கட்சியும் இருந்தது கிடையாது. இனிமேல் இருக்கப்போவதும் இல்லை.

புதுவையில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடுமையான நிதி நெருக்கடியிலும் சிறப்பான பட்ஜெட் போடப்பட்டுள்ளது. கவர்னர் அனைத்தையும் தடுத்தாலும், மத்திய அரசு வஞ்சித்தாலும் அவற்றை சமாளித்து இந்த அரசு நல்ல பெயர் பெற்றுள்ளது.

நம்மை குறை சொல்பவர்கள் எதிர்க்கட்சியாக மட்டுமே இருப்பார்கள். நாம் நிறைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் புதுவை அரசு திவாலாகி இருக்கும். மத்திய அரசு சில திட்டங்களுக்கு நிதி தருவதாக சொல்கிறது. திட்டத்தை நிறைவேற்றிய பின் நிதி தர மறுக்கிறது.

குறிப்பாக 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசிடம் நிதிகேட்டோம். தருவதாக கூறினார்கள். ஆனால் அதை அமல்படுத்தியபின் நிதி தரவில்லை. இதனால் அரசுக்கு ரூ.500 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த பணத்தை எங்கிருந்து எடுப்பது? இதை சமாளிக்கும் திறமை அரசுக்கு உள்ளது.

காங்கிரஸ் அரசுக்கு நாள்தோறும் பிரச்சினை. எத்தனை கோப்பு அனுப்பினாலும் அதற்கு தடை. திட்டங்களை நிறைவேற்ற புதிய வரிகள் போட்டால் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று சொத்துவரி, தண்ணீர் வரியை குறைத்துள்ளோம். எனவே பிரச்சினைகளை உணர்ந்து கட்சிக்காரர்கள் ஒத்துழைக்க வேண்டும். எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்