ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை

நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

Update: 2018-07-15 22:00 GMT
நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள தில்லை நகர் அண்ணாசாலை பகுதியில் குடியிருப்பவர் முருகேசன்(வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தனது மகன் வீட்டுக்கு முருகேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய உறவினர் ரங்கநாதன் என்பவர், தினசரி மாலை நேரத்தில் முருகேசனின் வீட்டுக்கு வந்து மின்விளக்கு போட்டு செல்வார்.

இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசனின் வீட்டில் மின்விளக்கை போடுவதற்கு ரங்கநாதன் வரவில்லை. இதை தொடர்ந்து மறுநாள், ரங்கநாதன் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக செல்போன் மூலம் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னையில் இருந்து முருகேசன் வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை காணவில்லை. இதன் மூலம் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், கதவு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கைரேகையை பதிவு செய்து சென்றனர்.

கொள்ளைபோன பொருட் களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்