உத்தரகோசமங்கை இளம்பெண் எரித்து கொலை: தப்பி ஓடிய வாலிபரை தேடி தனிப்படை போலீசார் விரைந்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே இளம்பெண் மாயமான சம்பவத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக உடல் மீட்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ளது ஆலங்குளம். இந்த ஊரைச்சேர்ந்தவர் விவசாயி வீரபாண்டி. இவரின் மகள் மாலதி(வயது20). சென்னை கல்லூரியில் பி.ஏ. படித்துவிட்டு வேலை தேடிவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29–ந் தேதி ஊருக்கு வந்துவிட்டு சென்றவர் பற்றி விபரங்கள் தெரியவில்லை. அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது தெரியாமல் பெற்றோர் கவலை அடைந்தனர்.
இதனை தொடர்ந்து அவரின் தந்தை வீரபாண்டி உத்தரகோசமங்கை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில் மாலதி கடைசியாக கருங்குளத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. அவரை பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தபோது அவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்பவர் என்பதும் ரெயிலில் சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு சென்னையில் ஒன்றாக பழகி வந்தது தெரிந்தது. ஏற்கனவே, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள சிவக்குமார் தனது திருமண விபரங்களை தெரிவிக்காமல் மாலதியிடம் பழகி வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 13–ந் தேதி மாலையில் திருஉத்தரகோசமங்கை விலக்கு அருகே கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு கிடப்பதாக அப்பகுதியில் ஆடுமேய்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அருகில் கிடந்த துப்பட்டா, வளையல் போன்றவைகளை வைத்து பார்க்கும் போது அது பெண் உடல் என்பதை கண்டுபிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக அந்த பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து விசாரணை செய்து பார்தததில் மாலதியின் உடல் என்பதை அறிந்து கொண்டனர்.
இதுபற்றி அறிந்த மாலதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து பார்த்து உடை மற்றும் வளையல் உள்ளிட்டவைகளை அடையாளம் காட்டி மாலதி என்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகா¥மீனா அங்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தார். சத்திரக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்சாமுவேல் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினார். எலும்புக்கூடான மாலதியின் உடல் அங்கிருந்து எடுத்துவரப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், போலீசாரின் கவனக்குறைவால் நடந்துள்ளதாகவும் கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து குற்றவாளியை கைது செய்வதாக உறுதி அளித்தனர்.
கொலை செய்யப்பட்ட மாலதி கடந்த 24–ந் தேதியே ஊருக்கு வந்துள்ளார். 29–ந் தேதி முதல் காணாமல் போய் உள்ளார். திருமணமான தகவல் அறிந்து மாலதி சிவக்குமாரிடம் சண்டை போட்டுள்ளார். அவரை சமாதானம் செய்த சிவக்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாலதி கேட்டதாக கூறப்படுகிறது. தொந்தரவு செய்வதாக கருதிய சிவக்குமார் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து சென்று இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஏனெனில், மாலதி காணாமல் போன சமயத்தில் போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது சிவக்குமார் விசாரணைக்கு வந்துள்ளார். தான் சந்தித்தாகவும், அதன்பின்னர் அவர் சென்றுவிட்டதாக தெரிவித்த சிவக்குமார் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு வந்து சேர்ப்பதாக உறுதி அளித்துவிட்டு சென்று தலைமறைவாகி விட்டார். இதனால், அவர்தான் கொலை செய்துள்ளார் என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:– சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கிடந்த துப்பட்டா மற்றும் வளையல்களை பெற்றோர் அடையாளம் காட்டி உள்ளனர். இதுதொடர்பாக தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடலின் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டு சிறப்பு உடல்ஒற்றுமை பரிசோதணைக்கு அனுப்பி உள்ளோம். மேலும், தோள்எலும்பு பட்டை எலும்பை வைத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சிவக்குமார் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடிவருகிறோம். விரைவில் பிடிபடுவார். தற்போதைய நிலையில் சந்தேகமரணமாக வழக்குபதிவு செய்துள்ளோம். விசாரணையின் அடிப்படையில் வழக்கு மாற்றப்படும். இந்த வழக்கு விசாரணையில் கவனக்குறைவாக செயல்பட்ட தனிப்பிரிவு காவலர் ஜடாமுனி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.