காமராஜரைப் போல தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

பெருந்தலைவர் காமராஜர் கல்விக்கு ஊக்கம் அளித்ததை போன்று தமிழக அரசு பள்ளி மற்றும் உயர்கல்வி துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2018-07-15 23:30 GMT

விருதுநகர்,

விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 116–வது பிறந்தநாள் விழா கல்வித் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். பழ.நெடுமாறன் சார்பில் அவரது பிரதிநிதி மாணிக்கம் விருதினை பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து விருதுநகர் நாடார் மகமை கமிட்டி உள்பட 3 கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சேவை விருதையும், 4 மருத்துவமனைகளுக்கு மருத்துவச் சேவை விருதையும் வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஏற்புரை வழங்கினார். விழாவிற்கு முன்னிலை வகித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், “மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் அடிமேல் அடி வைத்து பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருவதுடன், விருதுநகர் மாவட்டத்திற்காக கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார்“ என்றார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், ராஜலட்சுமி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன்(விருதுநகர்), பிரபாகரன்(நெல்லை), ஜெய்சிங்தியாகராஜ நட்டர்ஜி(தூத்துக்குடி), எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா (ஸ்ரீவில்லிபுத்தூர்), சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), இன்பத்துரை (ராதாபுரம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர். இவ்விழாவில் வரவேற்புரையாற்றிய நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிகோல்ராஜ், குளச்சல் துறைமுக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும், காமராஜர் பிறந்தநாள் அன்று மதுக்கடைகளை மூட வேண்டும், மத்திய அரசின் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், பனைமரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வைத்தார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடார் மகாஜன சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். விழாவில் த.மா.கா. சார்பில் மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் என்.எஸ்.வி.சித்தன், மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தங்கப்பாண்டியன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பத்துரை நன்றி கூறினார்.

தட்சிணமாற நாடார் சங்க தலைவர் சபாபதி பேசும்போது, “டெல்லி பல்கலைக்கழகத்திலும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் காமராஜர் பெயரில் இருக்கை ஏற்படுத்த வேண்டும்“ என்று கேட்டுக்கொண்டார்.

மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் கதிரவன், விழாவினை தொகுத்து வழங்கினார். முன்னதாக அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்டோர் காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் வந்த முதல்–அமைச்சருக்கு மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.பி., சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன் மற்றும் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் மூக்கையா, ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன் மற்றும் நகர, ஒன்றிய மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் சிவஞானம், வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி ஜோதிமணி தலைமையில் காமராஜர் சிலை முன்பு நோட்டு, புத்தகங்களை காணிக்கையாக வைத்து பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

மேலும் நினைவு இல்லம் முன்பு பெண்களின் நூற்பு வேள்வி நடைபெற்றது. நினைவு இல்லத்தில் இருந்து பெண்களின் கல்வி கலச ஊர்வலம் தொடங்கி, விழா நடைபெறும் கே.வி.எஸ். பள்ளியில் முடிவடைந்தது. நினைவு இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பதமிழன் உள்பட அரசியல் பிரமுகர்கள் பலர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்