சத்துணவு முட்டை ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும், தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சத்துணவு முட்டை ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-07-15 22:45 GMT

விருதுநகர்,

விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்திற்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

காமராஜர் ஆட்சி தான் நல்லாட்சிக்கு குறியீடாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிரதமர் மோடி பேசுகையில் காமராஜர் இருந்திருந்தால் இந்த நடவடிக்கையை பாராட்டி இருப்பார். பிரதமர் மோடி காமராஜர் வழியில் ஊழல் அற்ற, நேர்மையான மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகின்றார்.

தமிழக அரசு மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கும் தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது. மத்திய–மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எல்லா நிர்வாகத்திலும் ஊழல் அதிகரித்துவிட்டது. ஓட்டுக்கு நோட்டு கொடுத்தால் தேர்தலில் வெற்றி என்ற வழிமுறையில் தான் ஊழல் ஏற்படுகிறது. இந்த நிலை மாறி நேர்மையான ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழக அரசு எல்லா நிலைகளிலும் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்–ஒழுங்கு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். சத்துணவு முட்டை ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

சென்னை–சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. இந்த சாலையால் 5 மாவட்ட மக்களுக்கு பலன் ஏற்படும். இதுகுறித்து தமிழக அரசு அந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நியூட்ரினோ போன்ற திட்டங்களை மத்திய அரசு பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்தவே கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் பலன்கள் குறித்து விஞ்ஞானிகள் விரிவாக எடுத்து கூறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் இத்திட்டத்தின் பலன்கள் குறித்து கூறியுள்ளார். ஆனால் வைகோ போன்றவர்கள் இத்திட்டத்தின் நிலை பற்றி தெரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது அப்பகுதியின் வளர்ச்சியை பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்