குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடனாநதி, கருப்பாநதி அணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-07-15 22:45 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அருவிகளில் குளிக்க நேற்று காலையில் விதிக்கப்பட்ட தடை இரவு வரை நீடித்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் குளிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் புலியருவியில் கடும் கூட்ட நெரிசலுக்கு இடையே குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நேற்று அதிகாலையில் இருந்தே தொடர்ந்து சாரல் மழை தூறிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. வெயில் இல்லை. இதனால் குற்றாலத்தில் மிகவும் குளிர்ச்சியாக, ரம்மியமான சூழல் நிலவியது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் 76 அடியாக இருந்த கடனாநதி அணையின் நீர்மட்டம் நேற்று 79 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று இரவு தனது முழு கொள்ளளவான 85 அடியை எட்டியது. இரவில் அணைக்கு 700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி 100 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதேபோல் கடையநல்லூர் கருப்பாநதி அணையும் தனது முழு கொள்ளளவான 72 அடியை எட்டி நிரம்பி வழிந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. கடனாநதி, கருப்பாநதி அணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை, நேற்று முன்தினம் 95.80 அடியாக இருந்தது. நேற்று 97.20 அடியாக உயர்ந்தது. இதேபோல் ராமநதி அணையின் நீர்மட்டம் 79 அடியாக உள்ளது.

இரவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த அணை விடிவதற்குள் நிரம்பி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதைதவிர மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளும் நிரம்பி வருகின்றன.

மேலும் செய்திகள்