போத்தனூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
கோவை நாச்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.
போத்தனூர்,
கோவை நாச்சிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் கண்காணிப்பாளர் கிருஷ் காந்த் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் டாஸ்மாக் கடை உள்ள இடத்தின் உரிமையாளர் பார்த்தபோது டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து உடனடியாக கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த கண்காணிப்பாளர் கிருஷ் காந்த் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த 1,410 மது பாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் இருக்கும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.