புள்ளம்பாடி பாசன வாய்க்காலை சீரமைக்க காமராஜர் சிலையிடம் மனு கொடுத்த விவசாயிகள்

புள்ளம்பாடி வாய்க்காலை சீரமைக்க கோரி காமராஜர் சிலையிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் கொடுத்தனர்.

Update: 2018-07-15 23:00 GMT
திருச்சி,

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் வெட்டப்பட்டது. காவிரி ஆற்றில் வாத்தலை பகுதியில் இருந்து பிரிந்து வரும் இந்த வாய்க்கால் மூலம் திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த வாய்க்காலின் கடைமடை பகுதிகளுக்கு செல்லும் கால்வாய்கள் போதுமான பராமரிப்பு இன்றி உள்ளது.

இதனை சுட்டிக்காட்டும் வகையில் நேற்று காமராஜர் பிறந்த நாளையொட்டி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் “நீங்கள் வெட்டிய புள்ளம்பாடி வாய்க்காலின் கடை மடை பகுதிகளுக்கு தற்போது தண்ணீர் முறையாக செல்வது இல்லை. ஆக்கிரமிப்பினால் பல இடங்களில் கால்வாய் சுருங்கி போய்விட்டது. கருவேல மரங்கள் மற்றும் புதர் மண்டியதால் தண்ணீர் செல்வது தடை பட்டு உள்ளது. குடிமராமத்து என்ற பெயரில் அவசரம் அவசரமாக செய்யப்பட்டு வரும் பணிகள் திருப்தி அடையும் வகையில் இல்லை“ என கூறப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கைகளை கோஷமாகவும் எழுப்பி விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

விவசாயிகள் நூதன முறையில் காமராஜர் சிலையிடம் மனு கொடுத்த காட்சிகளை அந்த வழியாக சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது கேமரா மூலம் படம் பிடித்தனர். 

மேலும் செய்திகள்