புதிதாக நியமிக்கப்பட்ட பங்குத்தந்தையை மாற்றக்கோரி தஞ்சை ஆயர் இல்லத்தை கிறிஸ்தவர்கள் முற்றுகை

புதிதாக நியமிக்கப்பட்ட பங்குத்தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை மாற்றக்கோரி தஞ்சை ஆயர் இல்லத்தை கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-07-15 23:00 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை மகர்நோன்புச்சாவடி சூசையப்பர் ஆலயத்தில் பங்கு தந்தையாக இருந்தவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த ஆலயத்திற்கு கொரடாச்சேரியில் இருந்து பங்கு தந்தையாக இருதயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட பங்குதந்தை மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், எனவே மகர்நோன்புச்சாவடி ஆலயத்திற்கு இவரை பங்கு தந்தையாக அனுமதிக்கக்கூடாது. இவரை மாற்றி விட்டு வேறு பங்குத்தந்தையை புதிதாக நியமிக்க வேண்டும் என்று அந்த ஆலயத்தில் வழிபாடு நடத்தும் கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர். இதை வலியுறுத்தி தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோசிடம் மனு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று மனு கொடுக்க ஆயர் இல்லத்திற்கு சென்றனர். ஆனால் ஆயர் இல்லம் பூட்டப்பட்டு இருந்ததால் விரக்தியடைந்த பொதுமக்கள் ஆயர் இல்ல நுழைவு வாயிலை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்