ரஜினியால் மட்டுமே ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும்
தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று கோவையில் தமிழருவி மணியன் கூறினார்.;
கோவை,ஜூலை.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், லோக் ஆயுக்தா சட்டத்தை கூர்மைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கோவை காந்தி பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் பாலாஜி, மாநில துணைத்தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை, இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பெருமளவு குற்றங்கள் குறைந்து இருப்பதாகவும், மக்களிடம் பொருட்களை வாங்கும் சக்தி அதிகரித்து இருப்பதாகவும், அந்த மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நெடுவாசல், ஸ்டெர்லைட் என்று பல போராட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்பட்டன. ஆனால் ஏன் அனைத்து கட்சிகளும் சேர்ந்து மதுக்கடைகளை ஒழிக்க போராட்டம் நடத்த முன்வரவில்லை.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அவசரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதில் நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை சேர்க்கப்பட வில்லை. இதனால் ஊழலை பாதுகாக்கும் சட்டமாக தான் இது இருக்கிறது. எனவே இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப் பட கூடியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் அந்த இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழருவி மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் குட்கா முதல் முட்டை வரை ஊழல் நடைபெற்று உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இந்த ஆட்சி இன்னும் 60 நாட்களில் முடிந்து விடும். ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான ஆட்சி என்பது தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் மாற்று அரசியல் என்பதற்கு காலம் எங்கள் கண்முன் காட்டுவது ரஜினிகாந்தை தான். தமிழகத்தில் ரஜினிகாந்தால் மட்டுமே ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை கொடுக்க முடியும்.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நடிகர்கள் தான். ஆனால் மக்கள் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டனர். சிவாஜியை நடிகராகதான் பார்த்தனர். அதுபோன்று தான் தற்போது ரஜினியை மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டு உள்ளனர். கமல்ஹாசனை நடிகராக தான் பார்க்கிறார்கள். எனவே ரஜினிக்கு தமிழக மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது.
ரஜினி தனது அரசியல் தொடங்கும் திட்டத்தின் அடிப்படை பணிகளை தற்போது செய்து வருகிறார். அந்த பணி 80 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளது. அந்த பணிகளும் விரைவில் முடிந்து விடும். எனவே விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார். காந்திய மக்கள் இயக்கத்துக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எங்கள் இயக்கத்தை கலைத்துவிட்டு ரஜினியுடன் இணைவதாக கூறுவது வதந்திதான்.
சேலம்- சென்னை பசுமைசாலை திட்டத்துக்கு முதலில் ரூ.7 ஆயிரம் கோடி என்றார்கள். தற்போது ரூ.10 ஆயிரம் கோடி என்று கூறுகிறார்கள். இதன் பின்புலம் என்ன என்பதையும், சென்னை துறைமுகம் -மதுரவாயல் மேம்பாலம், தாம்பரம்-திண்டிவனம் 6 வழிச்சாலை, சென்னை-பெங்களூரு 6 வழிச்சாலை திட்டம் எங்கே சென்றது என்பதை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.