ஆஸ்டல் வாழ்க்கைைய ஆனந்தமாக்கிக்கொள்வது எப்படி?
பெண்கள் படிக்கும் காலத்திலும், அலுவலகங்களில் வேலைபார்க்கும் காலகட்டத்திலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஆஸ்டல்களில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
பெண்கள் படிக்கும் காலத்திலும், அலுவலகங்களில் வேலைபார்க்கும் காலகட்டத்திலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஆஸ்டல்களில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது அங்கே அவர்களோடு தங்கும் தோழிகளைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறது.
கல்லூரி தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும், அலுவலக தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும் வெவ்வேறு மாதிரியானவை. கல்லூரி காலத்தில் பெற்றோரின் வருமானத்தில் ஆஸ்டல் வாழ்க்கை அமையும். அதில் விளையாட்டுத்தனமும், கலாட்டாவும் அமைந்திருக்கும். கல்வி கற்பது மட்டுமே பொறுப்பான ஒரு செயலாக இருப்பதால் அந்த காலகட்டம் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி சக மாணவிகளும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் சிந்தனையும், செயலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால் பெருமளவு பிரச்சினை ஏற்படாமலே அவர்களது கல்லூரி ஆஸ்டல் வாழ்க்கை முடிந்துவிடும்.
ஆஸ்டலில் தங்கியிருந்து வேலைபார்க்கச் செல்வது அப்படியானதல்ல. பல்வேறு சூழலில் இருந்து வரும் பல பருவத்தினர் அங்கே ஒன்றிணைவார்கள். அங்கு தங்கியிருக்கும் எல்லா பெண்களுக்குமே பல்வேறு குடும்ப பொறுப்புகளும், கடமைகளும் இருக்கும். ‘பாதுகாப்பாக தங்கியிருக்கவேண்டும். கவனமாக வேலைக்குச் சென்று திரும்பவேண்டும். சரியான உணவுகளை சாப்பிட்டு உடல் நலனை பராமரிக்க வேண்டும். பொறுப்பாக சம்பளத்தை வாங்கி வீட்டிற்கு அனுப்பவேண்டும்’ என்பது போன்ற எத்தனையோ கடமைகளும், பொறுப்புகளும் ஆஸ்டலில் தங்கி வேலைபார்க்கும் பெண் களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் அவர்களோடு அறையில் உடன் தங்கியிருக்கும் தோழிகள், தொந்தரவு தர ஆரம்பித்துவிட்டால், அது கவலைக்குரிய விஷயமாகிவிடும்.
‘‘என் ஆஸ்டல் தோழிக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய்விடும். அப்போது நான் பக்கத்தில் இருந்து அவளை கவனிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள். என்னால் சில நேரங்களில் முடியாதபோது அவளுக்கு கோபம் வந்துவிடுகிறது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நான் பல்வேறு குடும்ப பொறுப்புகளை சுமந்துகொண்டு, குடும்பத்தை பிரிந்து இங்கே தங்கியிருந்து வேலைபார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் என் வேலையை பார்ப்பதா? அல்லது இவளுக்கு ஆயா வேலை பார்ப்பதா என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்” என்று புலம்புகிறாள், அந்த பெண்.
“என்னுடைய பொருட்கள், ஆடைகள் என்று எல்லாவற்றையும் என் அறையில் தங்கியிருக்கும் ஒருசில பெண்கள் என் அனுமதி இல்லாமலேயே அணிந்து கொள்கிறார்கள். நான் எங்காவது வெளியே புறப்பட நினைக்கும்போது நான் விரும்பும் ஆடைகள் எல்லாம் அழுக்காக கிடக்கும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது நல்ல பழக்கம்தான். ஆனால் எனக்கு தேவைப்படும்போது நான் யாரிடம் போய் கேட்பது?” என்று கேள்வி எழுப்புகிறார், இன்னொரு பெண்.
“என் ரூம்மேட் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து விட்டது என்று சொல்லி என் கைபேசியை பயன்படுத்துகிறாள். தடுக்க முடியவில்லை. அவளுக்கு வரும் அழைப்புகள் எல்லாம் எனக்கு வருகிறது. அது அவ்வளவு நன்றாக இல்லை. நான் அவள் இல்லை என்று சொன்னால்கூட யாரும் நம்புவதில்லை. அடிக்கடி பேசி தொந்தரவு செய்கிறார்கள். நான் வீட்டிற்கு போயிருந்தபோதும் அப்படி ஒரு அழைப்பு எனக்கு வந்தது. அதை என் அப்பா எடுத்துப் பேசி பெரிய பிரச்சினையாகி விட்டது. இதை எல்லாம் என் தோழிக்கு சொல்லி புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது” என்கிறார் ஒரு பெண்.
இப்படி ஆஸ்டலில் தங்கியிருந்து வேைல பார்க்கும் பெண்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
ஆஸ்டல் தோழி ஒருவருக்கு முகப்பரு வந்திருக்கிறது. உடனே இன்னொரு தோழி தான் முகப்பருவுக்கு பயன்படுத்திய மருந்தை அவளுக்கு கொடுத்து, இரவில் பூசிக்கொண்டு தூங்கும்படி கூறியிருக்கிறாள். அவளும் அவ்வாறே செய்ய, மறுநாள் காலையில் விழித்து பார்த்தபோது அந்த பெண்ணின் முகம் சிவந்து வீங்கிபோய் இருந்திருக்கிறது. அந்த மருந்து அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியை உருவாக்கிவிட்டது. அதனால் அந்த தோழி களுக்குள் சண்டை உருவாகிவிட்டது. கடைசியில் இருவருமே தங்கள் அறைகளை காலிசெய்துவிட்டு போயிருக்கிறார்கள்.
“ஒருமுறை எனது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு போக வேண்டும். தனியாக போக முடியவில்லை. ரூம்மேட்டை துணைக்கு அழைத்தேன். அவளோ ‘தன்னால் வர முடியாது. முக்கியமான பிறந்தநாள் பார்ட்டிக்கு போக வேண்டும்’ என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள். இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இரவு நேரங்களில் நமக்கு ஏதாவது பிரச்சினை என்றால், எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக தூங்குவதுபோல் சிலர் நடிப்பார்கள். சிலர் நமக்கு ஏதாவது பிரச்சினை என்றாலே, உதவி கேட்டுவிடுவோம் என நினைத்து பயந்து ஒதுங்குவார்கள். அதே நேரத்தில் அவசர காலத்தில் கை கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்” என்கிறார், ஒரு பெண்.
“அவசர தேவைக்கு திடீரென்று பணம் கேட்பார்கள். இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. சொன்னால் நட்பு முறிந்துவிடும். கொடுத்தே ஆக வேண்டும். கொடுத்தால் அதை திருப்பித் தரும் எண்ணம் சிலருக்கு இருக்காது. ஒருசிலர், ‘உன்னிடமிருந்து பணம் வாங்கிய நான்காம் நாளே திருப்பித்தந்துவிட்டேனே! உனக்கு நினைவில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் களால் நானும் சில முறை பணத்தை இழந்திருக்கிறேன். எனது சின்னச்சின்ன பொருட்கள் அடிக்கடி காணாமல் போய்விடும். அது பற்றி யாரிடமும் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், பிரச்சினைதான் உருவாகும்..” என்று வருத்தத்தோடு சொல்கிறார், சென்னையை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர்.
ஆஸ்டல் வாழ்க்கை அருமையாக அமைய..
கூடுமானவரை விலை உயர்ந்த பொருட்களை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள். தொலைந்தால் யாரையும் கேட்கமுடியாது. கேட்டால் சண்டை வருமே தவிர பொருள் வராது.
உடன் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு தக்கபடி நடந்துகொள்ளுங்கள்.
உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை உங்கள் அறை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் மாத்திரை மருந்துகளை மற்றவர் களுக்கு கொடுக்காதீர்கள். அது சில நேரங்களில் நீங்களே எதிர்பாராத விதத்தில் கொலைக்கு சமமாகிவிடும்.
கூடுமானவரை மற்றவர்களை வேலை வாங்காதீர்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.
எல்லோருக்குமாக சேர்த்து மற்றவர்கள் வேலை செய்யும்போது, கூடுமானவரை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மனதில் எதையாவது வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் சிடுசிடுப்பாக நடந்துகொள்ளாதீர்கள். முடிந்த அளவு புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் வலம் வாருங்கள்.
அவசர தேவைக்கு பணம் கொடுத்து உதவுங்கள். ஆனால் ஞாபகமாக திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி குறைகூறி உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.