அந்தரத்தில் தொங்கிய காதல்
‘உலகளவில் மெய்சிலிர்க்க வைக்கும் சாகச விளையாட்டுகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் இரு மலைகளுக்கு இடையே கம்பிகளில் தொங்கிகொண்டு செல்லும் ‘ஜிப் லைன்' எனப்படும் சாகச விளையாட்டு பிரபலமானது.
‘உலகளவில் மெய்சிலிர்க்க வைக்கும் சாகச விளையாட்டுகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் இரு மலைகளுக்கு இடையே கம்பிகளில் தொங்கிகொண்டு செல்லும் ‘ஜிப் லைன்' எனப்படும் சாகச விளையாட்டு பிரபலமானது. இந்த சாகச விளையாட்டில் இரு உயரமான மலைப்பகுதி தேர்வு செய்யப்பட்டு அவைகளின் உச்சிப்பகுதிகள் இரும்பு கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்கும். சாகசத்தில் கலந்து கொள்பவர் உடலில் பாதுகாப்பு கவசங்களுடன் கம்பியில் தொங்கும் அமைப்புடன் இணைத்துக் கொண்டு மலைப்பகுதியின் ஒரு முனையில் இருந்து சறுக்கி செல்வார். அவ்வாறு செல்லும்போது வானத்தில் பறப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். பல்வேறு மேலை நாடுகளில் இந்த ஜிப் லைன் சாகச விளையாட்டு நடைமுறையில் இருக்கிறது.
அமீரகத்தில் இதுபோன்று ஜிப் லைன் விளையாட்டுக்கு ஏற்ற பகுதியாக ராசல் கைமாவின் ஜெபல் ஜைஸ் மலைப்பகுதி அமைந்திருக்கிறது. அங்கு சுற்றுலா வளர்ச்சித்துறை ஆணையத்தின் சார்பில் சாகச விளையாட்டுக்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலைப்பகுதி 6 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டது. மலைப்பகுதிகளின் இரு முனைகளுக்கு இடையே கம்பிகள் அமைக்கப்பட்டு, தற்போது அங்கு 3 ஜிப் லைன்கள் உள்ளது. அவை 164 அடி, 196 அடி மற்றும் 984 அடி நீளம் கொண்டவை. இதில் இடையே 2.8 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்திருக்கும் ஜிப்லைன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் மூலம் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சறுக்கி செல்லலாம். இதில் சறுக்கி செல்லும்போது 30 மாடி கட்டிடத்தில் இருந்து குதிப்பதுபோன்ற பிரமிப்பை ஏற்படுத்தும்.
இங்கு ஜிப்லைனில் தொங்கியபடி இந்திய ஜோடி ஒன்று தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளது. அந்த ஜோடியின் பெயர் மேகே ஷோன் - சூசன் குருவில்லா. இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக ராசல் கைமாவுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஜிப்லைன் சாகச விளையாட்டை பார்த்ததும் அதில் பயணிக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். மேகே ஷோன், சூசனை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் நட்புடன் பழகி வந்ததால் காதலை வெளிப்படையாக சூசனிடம் சொல்வதற்கு தயங்கி இருக்கிறார். சாகச விளையாட்டில் ஈடுபடும்போது காதலை சொல்லிவிடுவதற்கு தீர்மானித்திருக்கிறார். இருவரும் ஜிப்லைனில் தொங்கியபடி 6 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு சென்றிருக்கிறார்கள். பின்னர் இருவரும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்திருக்கிறார்கள்.
இருவரும் 300 அடி தூரத்தில் இருந்தபோது திடீரென்று ஜிப்லைன் நிறுத்தப்பட்டது. அதனால் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சூசன் திகைத்து போனார். அதேவேளையில் அவருக்கு இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. ஜிப்லைன் விளையாட்டு தளத்தில் ‘சூசன் என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பேனர் தொங்கி கொண்டிருந்தது. மேகே ஷோன், சுற்றுலா வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று தன் காதலை சூசனிடம் சொல்லும் திட்டத்திற்கான ஏற்பாடுகளை ரகசியமாக செய்திருந்திருக்கிறார்.
பேனரை பார்த்ததும் சூசன், ஷோனை பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்கினார். அந்தரத்தில் தொங்கியபடியே ‘யெஸ்’ என திருமணத்திற்கு ஓ.கே சொல்லிவிட்டு வெட்கத்தில் முகத்தை கைகளால் மூடிக்கொண்டார். பின்னர் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இருவரும் கீழே இறங்கினார்கள். அப்போது சூசனுக்கு ஷோன் மோதிரம் அணிவித்தார். அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்கள். ராசல் கைமாவின் ஜிப் லைனில் முதல் முறையாக 6 ஆயிரத்து 500 அடி உயரத்தில் காதலை தெரிவித்த இந்திய ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
-மர்யம்.சா