திருப்பூரில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து துணிகரம்: தம்பதி உள்பட 3 பேரை தாக்கி நகை கொள்ளை முகமூடி ஆசாமிகள் கைவரிசை

திருப்பூரில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி ஆசாமிகள், தம்பதி உள்பட 3 பேரை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2018-07-14 23:15 GMT
திருப்பூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் ஆண்டிப்பாளையம் ஜான்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(வயது 50). இவர் முல்லைநகரில் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி(40). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் வெளியூரில் தங்கி படித்து வருகிறார். இவருடைய மகன் சஞ்சய்(14) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று முன்தினம் இரவு கோகுலகிருஷ்ணன், தனது மனைவி, மகனுடன் இரவு சாப்பாடு சாப்பிட்டார். பின்னர் 3 பேரும் படுக்கை அறைக்கு சென்று தூங்கினார்கள். நள்ளிரவு 1¾ மணி அளவில், சுப்புலட்சுமி அணிந்திருந்த 2½ பவுன் சங்கிலியை மர்ம ஆசாமி ஒருவன் பறித்தான். திடுக்கிட்டு சுப்புலட்சுமி விழித்து பார்த்தபோது முகமூடி அணிந்திருந்த 2 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.


அவர்களை பார்த்து சுப்புலட்சுமி சத்தம் போட்டதும் அருகே படுத்திருந்த கோகுலகிருஷ்ணன், சஞ்சய் ஆகியோரும் விழித்து மர்ம ஆசாமிகளை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த ஆசாமிகள் கைகளில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் 3 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பினார்கள்.

உடனடியாக இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீட்டின் முன்பக்க கதவை உள்புறமாக தாழிட்டு படுக்கை அறையில் 3 பேரும் தூங்கியுள்ளனர். முகமூடி ஆசாமிகள் இரும்பு கம்பியால் முன்பக்க கதவை நெம்பி உடைத்து உள்ளே புகுந்து பின்னர் சங்கிலியை பறித்து, தடுக்க வந்தவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பியது தெரியவந்துள்ளது. மர்ம ஆசாமிகள் லுங்கியால் தங்களின் முகத்தை முடியிருந்துள்ளனர். அவர்களுக்கு 35 வயதுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.


மர்ம ஆசாமிகள் தாக்கியதில் கோகுலகிருஷ்ணனுக்கும், அவருடைய மனைவிக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. சிறுவன் சஞ்சய்க்கு கண் இமை அருகே ரத்தகாயம் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் தங்கவேல் ஆகியோரும் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

மர்ம ஆசாமிகள் கோகுலகிருஷ்ணனின் வீட்டை நன்கு நோட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வீட்டில் மற்ற எந்த பொருளும் கொள்ளை போகவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்