முன்விரோதத்தில் தொழிலாளி அடித்துக்கொலை - முதியவர் கைது

அரூர் அருகே முன் விரோதத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-07-14 22:30 GMT
அரூர்,

அரூர் அருகே முன் விரோதத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் அன்பரசன் (வயது 35), தொழிலாளி. அதேபகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (63). இவருடைய மகன் சுரேஷ் (35). இவர்களுக்கும், அன்பரசனுக்கும் அந்த பகுதியில் உள்ள ஏரியில் வீடு கட்ட இடம் பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அன்பரசன் அவ்வப்போது மது குடித்து விட்டு வந்து வெள்ளையன் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்பரசன் மது குடித்து விட்டு வந்து, வெள்ளையனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் அப்போது அங்கு வந்த வெள்ளையன், அவருடைய மகன் சுரேஷ் ஆகியோர் இது தொடர்பாக அன்பரசனிடம் தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வெள்ளையன், சுரேஷ் ஆகியோர் சேர்ந்து அன்பரசனை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் தந்தை, மகன் இருவரும் விடாமல் விரட்டி சென்று அன்பரசனை இரும்பு கம்பியால் தாக்கினர். அப்போது தலையில் பலத்த காயம் அடைந்த அன்பரசன் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையனை கைது செய்தனர். தப்பி ஓடிய சுரேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்