நாகை மாவட்டத்தில் சுருக்கு வலையை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் சுருக்கு வலையை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.

Update: 2018-07-14 22:45 GMT
பொறையாறு,

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவர்கள் நேற்று அதிகாலை பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது மீனவர்கள் வலையில் சிறிய வகையான பொறுவா மீன்கள் மட்டும் அதிகமாக சிக்கின. ஆனால், பெரிய வகை மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள், மீன்களை விற்கும் பெண்கள் மற்றும் மீன்களை ஏலம் எடுப்பவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து சந்திரபாடி மீனவர்கள் கூறியதாவது:-

நாங்கள் எதிர்பார்த்தது போல் வாலை, காக்கை, காளான், சுறா, பன்னாகத்தாளை, கண்டல், செங்காலா, கிளங்கான், மாஸ், திருக்கை, கனவாய், நண்டு, கேரை, கானாங்கெலுத்தி மற்றும் பெரியவகை பாரை, வஞ்ஜிரம், கொடுவாய், வவ்வால் போன்ற அதிக விலைக்கு விற்பனையாகக்கூடிய மீன்கள் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக சிறியவகை மீன்கள் சிக்குகின்றன. இதனால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. நாகை மாவட்ட கடல் பகுதியில் சுருக்கு வலையை கொண்டு மீன்பிடித்தால், கப்பல் படையினர் வந்து வலையை எடுத்து கொண்டு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். சுருக்கு வலையை கொண்டு மீன் பிடித்தால் மட்டுமே பெரிய வகை மீன்கள் சிக்கும். அதில் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தற்போது நாங்கள் சாதாரண வலையை கொண்டு கடலுக்கு மேல்பகுதியில் கிடைக்கும் மீன்களை மட்டும் பிடித்து வருகிறோம். ஆந்திரா, கேரளா, குஜராத், மும்பை, கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சுருக்கு வலையை கொண்டு மீன் பிடிக்கின்றனர். மத்திய அரசு அந்த மாநில மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சுருக்கு வலையை கொண்டு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்ட மீனவர்களை கப்பல் படையினர் நடுக்கடலில் வந்து கண்காணிக்கின்றனர். எனவே, பிற மாநிலங்களில் உள்ளது போன்று நாகை மாவட்டத்தில் சுருக்கு வலையை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்