பம்மல் பகுதியில் பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பம்மல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பம்மல் அனகாபுத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் 54 கிரஷர்களால் காற்று மாசுபட்டு வருகிறது. எனவே அவற்றை மூட வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி 32 கிரஷர்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கிரஷர்களையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக நகராட்சியை வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் சங்கர் நகர், வ.உ.சி. நகர், மூவேந்தர் நகர், ஆதம் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் கழிவு நீர், 32-வது தெருவில் உள்ள தனியார் நிலங்களில் விடப்படுகிறது. எனவே அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதியினரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதைப்போல சங்கர் நகர் மேற்கு மற்றும் வடக்கு பிரதான சாலைகள் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற பம்மல் நகராட்சி வருவாய் மற்றும் சர்வே துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், சங்கர் நகர் 41-வது தெருவில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முறைகேடாக அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை திருத்தி அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேற்கண்டவை உள்பட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி வரி செலுத்துவோர் நல சங்கம் மற்றும் பம்மல் சங்கர் நகர் நல்வாழ்வு சங்கம் சார்பில் சங்கர் நகர் காந்தி மெயின் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பம்மல் பகுதியை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். இந்த போராட்டத்தால் பம்மல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.