7 இடங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2,950 வழக்குகள் தீர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2 ஆயிரத்து 950 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.

Update: 2018-07-14 23:15 GMT
திண்டுக்கல்,

நாடு முழுவதும், 2 மாதங்களுக்கு ஒரு முறை தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இதில், நிலுவையில் உள்ள விபத்து இழப்பீட்டு வழக்குகள், வராக்கடன், வங்கி காசோலை மோசடி, நிலப் பிரச்சினை உள்ளிட்ட வழக்குகள் விசாரித்து முடித்து வைக்கப்படுகிறது. அதன்படி, நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். திண்டுக்கல் வக்கீல் சங்க செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். நீதிபதிகள் சிங்கராஜ், கருணாநிதி, மதுரசேகரன், நம்பி, தீபா, மாதவராமானுஜம், சந்தோஷ், விபிசி மற்றும் மாஜிஸ்திரேட்டுகள் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனர்.

இதேபோல, பழனி சப்-கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கணேசன், பிரியா, அம்பிகா, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, 4 நீதிபதிகளும் பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதையடுத்து தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனர். இதேபோல் நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நிலக்கோட்டை நீதிமன்றங் களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் வங்கி வராக்கடன் வழக்குகள் 179 உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 950 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.7 கோடியே 98 லட்சத்து 45 ஆயிரத்து 673 தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்