சிவகங்கை அருகே அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்
சிவகங்கை அருகே வலையராதினிப்பட்டி கிராமத்தில் சாலை, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை,
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மேலப்பூங்குடி ஊராட்சிக்குட்பட்டது, வலையராதினிப்பட்டி. இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவு நிவர்த்தி செய்யப்படாத நிலை உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கீழப்பூங்குடி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலை வசதி ஓரளவு இருந்தும், இக்கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. இதனால் கிராம மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு வெளியூர் சென்று வர வேண்டும் என்றால் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருமலை கிராமத்திற்குச் சென்று, பின்பு அங்கிருந்து பஸ்சில் வெளியூர் செல்ல வேண்டும். இதுதவிர வலையராதினிப்பட்டியில் தொடக்கப்பள்ளி மட்டும் உள்ளது. இங்குள்ள மாணவ–மாணவிகள் மேல் படிப்பிற்கு 4 கி.மீ. தொலைவில் கீழப்பூங்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.
இந்தநிலையில் வலையராதினிப்பட்டிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ–மாணவிகள் தினசரி 4 கி.மீ. நடந்து சென்று படித்து வருகின்றனர். இதுகுறித்து வலையராதினிப்பட்டியை சேர்ந்த அழகர் கூறுகையில், சிவகங்கையில் இருந்து கீழப்பூங்குடி வழியாக எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு பள்ளி மாணவ–மாணவிகளை அழைத்துக்கொண்டு சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தோம். இதையடுத்து சில அரசு அலுவலர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்து இங்குள்ள போக்குவரத்து வழித்தடத்தை பார்வையிட்டு சென்றனர். அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதுடன், பஸ் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.