உடல்நலக்குறைவால் சுதந்திர போராட்ட தியாகி மரணம்: நேதாஜியுடன் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்

நேதாஜியுடன் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட தியாகி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

Update: 2018-07-14 21:45 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 95). சுதந்திர போராட்ட தியாகியான இவர் 1942–ம் ஆண்டு நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். இந்திய தேசிய ராணுவம் இந்திய மண்ணில் பல இடங்களை கைப்பற்றி மூவர்ண கொடியை பறக்க விட்டது. இதற்கிடையில் பர்மாவில் கனமழை பெய்ததால் போர் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் அலுவலகத்தை பர்மாவில் இருந்து வேறுஇடத்திற்கு மாற்றியிருப்பதாக நேதாஜி அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பீல்டு புரோபகாண்டா என்னும் யூனிட்டில் உள்ள அனைவரையும் வெளியே செல்ல முடியாமல் ஆங்கிலேயர்கள் சிறை வைத்தனர். அங்கு சிறை கைதியாக இருந்த ஆனந்தன் 9 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் தியாகி ஆனந்தன் கலந்துகொண்டு வந்தார். இதற்கிடையே உடல்நலக்குறைவு காரணமாக அவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாலக்காடு ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் தேசிய கொடி போர்த்தி அடக்கம் செய்யப்பட உள்ளது. இவருடைய மனைவி சிரோன்மணி இறந்து விட்டார். இவர்களுடைய மகள்கள் 2 பேரும் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும் செய்திகள்