மேட்டூர் அணை தண்ணீரை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மேட்டூர் அணை தண்ணீரை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-07-14 22:45 GMT

ஊட்டி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஊட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து உள்ளது. இந்த அணையில் 80 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பிய பின்னர் தான் தண்ணீரை திறந்து விட தமிழக அரசு முடிவு எடுக்கிறது. இது சரியானது அல்ல. அணை நீர்மட்டம் 70 அடி இருக்கும் போதே திறந்து விட்டால், குளம், குட்டைகள் நிரம்பும். தற்போது மேட்டூர் அணையை திறந்தால் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, மேட்டூர் அணை தண்ணீரை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தாலும், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து ஏழை, எளிய மக்கள் வீடுகளை இழக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எப்.) தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது. மத்திய அரசுக்கு சொந்தமான அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மூடப்படலாம் என்ற அச்சம் மக்கள் இடையே நிலவுகிறது. ஊட்டி அருகே சாண்டிநல்லா பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலை பல முதலாளிகளின் கை மாறி வந்த நிலையில் தற்போது மூடப்பட்டது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பதில் முழுகவனம் செலுத்தி சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் அந்த தொழிற்சாலை மூடப்பட்டு இருக்காது. இதனை நம்பி உள்ள 600 தொழிலாளர் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு இருக்காது. ஆகவே இந்த தொழிற்சாலைக்கு உரிய கால அவகாசம் அளித்து, தொழிற்சாலை இயங்க அரசும், மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்ய வேண்டும். கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதை தனியாருக்கு ஒப்படைப்பது சரியாகாது. அந்த தனியார் நிறுவனம் குடியிருப்புகளுக்கு வழங்கும் குடிநீருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி வசூலிக்கும் நிலைமை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்