கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்ப அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்ப அட்டையை ஒப்படைக்க வந்த ராயப்ப நகர் பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-14 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ராயப்ப நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையுடன் நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ராயப்ப நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் சாக்கடை பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலும் வி.களத்தூரில் உள்ள தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் நாங்கள் வசிக்கும் ராயப்ப நகரில் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்று நோய் பரவும் அபாய சூழ்நிலை ஏற்படுகிறது. தற்போது கழிவுநீர் வருவதற்கு கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. எனவே வி.களத்தூரில் உள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை எங்கள் பகுதிக்குள் வருவதை தடுக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை நிறுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இல்லையென்றால் அதிகாரியிடம் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியிடம் பேசுவதற்கு ராயப்ப நகரை சேர்ந்த பொதுமக்களில் சிலரை போலீசார் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி கூறியதை தொடர்ந்து ராயப்ப நகரை சேர்ந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்