வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் நூதன முறையில் ரூ.2¾ லட்சம் நகை, பணம் அபேஸ் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

விக்கிரவாண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் நூதன முறையில் ரூ.2¾ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர

Update: 2018-07-14 17:50 GMT

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 45), விவசாயி. இவரும் இவருடைய மனைவி செல்வியும் (40) நேற்று காலை வழக்கம்போல் அதே கிராமத்தில் உள்ள தங்களது நிலத்திற்கு சென்று விட்டனர். வீட்டில் இவர்களது மகளான 8–ம் வகுப்பு படிக்கும் நிஷா (13) மட்டும் தனியாக இருந்தாள்.

இதை நோட்டமிட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்கள் இருவரும் தனசேகர் வீட்டிற்கு சென்று அங்கிருந்த நிஷாவிடம், உன்னுடைய அப்பா தங்கள் இருவரையும் அனுப்பியதாகவும், வீட்டில் இருக்கும் நகை, பணத்தை வாங்கி வரும்படி சொல்லியதாக கூறினர்.

இதை நம்பாத சிறுமி நிஷா, அவர்கள் 2 பேரிடமும் தன்னுடைய அப்பா அதுபோன்று என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றாள். உடனே அவர்கள் இருவரில் ஒருவர், தனது செல்போன் மூலம் தனசேகருக்கு போன் செய்வதாக கூறி அவருடைய செல்போனுக்கு அழைப்பு விடுக்காமலேயே அவரிடம் செல்போனில் பேசுவதுபோன்று பாவனை செய்துள்ளார்.

இதை பார்த்து நம்பிய சிறுமி நிஷா, வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து அவர்கள் 2 பேரிடமும் கொடுத்தார். நகை, பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் 2 பேரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து தனசேகரும், அவரது மனைவி செல்வியும் தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது 2 பேரிடம் நகை, பணத்தை கொடுத்து அனுப்பியதாகவும், அதை வாங்கி விட்டீர்களா? என்று நிஷா எனது தந்தையிடம் கேட்டாள்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தனசேகர், அதுபோன்று, தான் யாரையும் வீட்டிற்கு அனுப்பவில்லை என்றார். அப்போதுதான், வீட்டில் சிறுமி தனியாக இருந்ததை நோட்டமிட்ட 2 வாலிபர்கள் அவளிடம் நூதன முறையில் பேசி நகை, பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2¾ லட்சமாகும்.

இதுகுறித்து தனசேகர், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்