சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த தாய்–மகன் கைது

சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த தாய்–மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-07-14 22:15 GMT

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). விவசாயி. இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு வெங்கடேசன் (25), கண்ணன் (28) என 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 12–ந்தேதி கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் கிருஷ்ணமூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கிருஷ்ணமூர்த்தியை சொத்துக்காக அவரது மனைவி தேவகி மற்றும் மகன் வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக தெரியவந்தது.

தேவகி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–

எனது கணவர் பூர்வீக நிலத்தில் ஒரு பகுதியை அவரது தங்கைக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், குடி போதையில் வந்து எங்களிடம் தகறாரில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டு வந்தோம். சம்பவத்தன்று குடிபோதையில் வந்து படுத்த எனது கணவரின் கால்களை நான் பிடித்து கொண்டேன். எனது மகன் வெங்கடேசன் ஆடு கட்டும் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தான். அதன் பின்னர் அவர் தானாக இறந்து விட்டதாக ஊர் பொதுமக்களிடம் கூறி நாடக மாடினோம். ஆனால் கழுத்தில் இருந்த காயங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்பு கொண்டோம் என்றார். இதையடுத்து தேவகி, வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சொத்துக்காக மனைவியும், மகனும் இணைந்து விவசாயியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்