பறிமுதல் செய்து நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

புதுக்கடையில் போலீஸ் நிலையம் முன்பு பறிமுதல் செய்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-07-14 23:00 GMT
புதுக்கடை,

புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்த டேவிட் மகன் பிரபின் (வயது22). இவரும் அதே பகுதியை சேர்ந்த அனிஷ்குமார் (25) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் இவர்கள் புதுக்கடையில் இருந்து அனந்தமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரபின் ஓட்டி சென்றார். அனிஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.

இவர்கள் புதுக்கடை போலீஸ் நிலையம் அருகே சென்ற போது, ஒரு வழக்கு தொடர்பாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் எந்திரம் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. நண்பர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்ததும் புதுக்கடை போலீசாரும், அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரபின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர்கள் விரைந்து சென்று  பிரபினின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

படுகாயம் அடைந்த அனிஷ்குமார் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்–இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்