நெல்லை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று: மரக்கிளை முறிந்து விழுந்து மாணவன் பலி வாழைகள்–மின்கம்பங்கள் சாய்ந்தன

நெல்லை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. மரக்கிளை முறிந்து விழுந்து மாணவன் பலியானான். வாழைகள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

Update: 2018-07-14 21:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. மரக்கிளை முறிந்து விழுந்து மாணவன் பலியானான். வாழைகள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

சூறைக்காற்று 

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஆனி, ஆடி மாதங்களில் ஆண்டுதோறும் காற்று வீசுவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்று வீசியது. நேற்று காலை 9 மணி முதல் பலத்த சூறைக்காற்று சுழன்று சுழன்று வீசியது. இந்த சூறைக்காற்று சாலையோரத்தில் கிடந்த மணலை இருசக்கர வாகனங்கள், நடந்து செல்வோர் மீது வாரி இறைத்தது. இதனால் ரோட்டில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

மரங்கள் முறிந்தன 


சூறைக்காற்றில் நெல்லை பேட்டை, பாளையங்கோட்டை பகுதியில் 5 வேப்பமரங்களும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 வேப்பமரங்களும் முறிந்து விழுந்தன. அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மரக்கிளைகள் உரசியதால் தீப்பொறிகள் கிளம்பின. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது.

மேலப்பாளையத்தில் பூவரசம் மரம் முறிந்து அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ சேதம் அடைந்தது. இந்த மரம் அருகில் உள்ள மின் கம்பத்திலும் விழுந்தது. இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

நெல்லை சந்திப்பு சங்கீத சபா அருகில் ஒரு வேப்ப மரம் முறிந்து மின் கம்பத்தில் விழுந்தது. இதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. நெல்லை, பாளையங்கோட்டை, பேட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை சூறைக்காற்று பலமாக வீசியது. இதில் 50–க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல் சாலையோரங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர போர்ட்டுகளும், வீடுகளின் மீது போடப்பட்டு இருந்த மேற்கூரைகளும் சேதமடைந்தன. நெல்லை வண்ணார்பேட்டையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகை காற்றில் பறந்து சென்று சாலையோரத்தில் விழுந்தது.

பஸ்சின் மேற்கூரை உடைந்தது 

நேற்று காலையில் நெல்லை வண்ணார்பேட்டை பணிமனையில் இருந்து வள்ளியூருக்கு ஒரு அரசு பஸ் சென்றது. இந்த பஸ் தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்றபோது சூறைக்காற்றில் பஸ்சின் மேற்கூரை உடைந்து தொங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணிகள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மின்ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. சுமார் 6 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மாணவர் பலி 

கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, ராமநதி, கடனா அணை, மாதாபுரம், ஆம்பூர், கருத்தப்பிள்ளையூர், சிவசைலம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது.

திருச்சி ஒத்த கோபுர பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கலீல். இவர் தனது உறவினர்கள் 20–க்கு மேற்பட்டோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றாலத்துக்கு சுற்றுலா வந்திருந்தனர். நேற்று அவர்கள் கடையம் அருகே உள்ள ராமநதி அணை அடிவாரப்பகுதி கால்வாய்க்கு சென்றனர். அங்கு அவர்கள் குளித்தனர்.

பின்னர் அனைவரும் அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட்டனர். கைகழுவும் போது, அங்கிருந்த சவுக்கை மரத்தின் கிளைகள் திடீரென சூறைக்காற்றில் முறிந்து விழுந்தன. இதில் கலீல் மகன் முகம்மது யாசின் (வயது 15) மீது மரக்கிளை விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் முகம்மது யாசினை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, முகம்மது யாசின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. முகம்மது யாசின், திருச்சியில் உள்ள கி.ஆ.பே. விஸ்வநாத மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதியவர் காயம் 

இதேபோல் கடையம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ள பழமையான அரச மரம் வேறோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த சிற்பி ரவீந்திரன் (60) என்பவர் மீது மரக்கிளை விழுந்ததில் அவர் காயம் அடைந்தார். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த கார் மற்றும் அருகில் உள்ள வீட்டுச் சுவரும் சேதமடைந்தது. மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் மாடக்கண்ணு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். காயம் அடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மரத்தை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ராமநதி அணைக்கு செல்லும் வழியில் 4 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் மரங்களும் முறிந்து விழுந்ததில் அணைக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்தனர். பிள்ளைகுளம், சிவசைலம் மெயின் ரோடு பகுதிகளிலும் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

வாழைகள் நாசம் 

வாசுதேவநல்லூர் அருகே புதுக்குளம் கண்மாய் பகுதி, நாரணபுரம் பகுதி–2 ஆகிய இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சூறைக்காற்றில் சாய்ந்து நாசமாயின. தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் சண்முகநாதன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், தோட்டக்கலைத்துறை அதிகாரி சண்முகவேலு உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்