மனித குல நண்பன் ‘மீகாமன்’ ஜேம்ஸ் குக்
உலகில் நாடுகாண் பயணிகள் பலரும் இருந்தாலும் அவர்களில் ‘மீகாமன்’ (கேப்டன்) என்றழைக்கப்பட்ட ஒரே பயணி ஜேம்ஸ் குக் மட்டுமே.
துல்லியமான கடற்பயண அறிவு, வரைபட உருவாக்க ஞானம், தலைமைப் பண்பு ஆகியன தான் அவரை அப்படி அழைக்க வைத்தது. மீகாமன் இந்தப்பெயர் புகழ்ச்சிக்கான ஒன்றல்ல, எல்லோர் மனதிலும் இயல்பாய் எழுந்த மரியாதைக் காரணமாக கிடைத்தது.
பிரிட்டனைச் சேர்ந்த இவரது கப்பலை, பிரிட்டனுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த உக்கிரமான நேரத்தில், ஸ்பெயினின் போர்க்கப்பல் ஒன்று சுற்றி வளைத்தது. உள்ளே கப்பலில் இருப்பவர் ஜேம்ஸ் குக் என்றறிந்ததும் ஸ்பெயின் படைத் தலைவர் அவரது கப்பலை எதுவும் செய்ய வேண்டாம் அவர் தொடர்ந்து செல்ல அனுமதியுங்கள் என்று தனது படைக்கு உத்தரவிட்டாராம். ஜேம்ஸ் குக் கப்பல் சிறு சேதாரம் கூட இல்லாமல் தொடர்ந்து தன் வழியில் சென்றது.
பெஞ்சமின் பிராங்க்ளின் பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். அவர் ஒரு விஞ்ஞானி என்று தெரியும். அமெரிக்காவின் அரசியல் சாசனத்தை இவர் தலைமையில்தான் வரையறுத்தார்கள். அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.
அமெரிக்கா சுதந்திரம் பெற்றதும் இரண்டு தபால் தலைகளை வெளியிட்டது. ஒன்று அமெரிக்காவின் சுதந்திரத்துக்காக போரிட்ட, ‘அமெரிக்காவின் தந்தை’ எனப்படும் ஜார்ஜ் வாஷிங்டன், மற்றொன்று பெஞ்சமின் பிராங்க்ளின். அத்தனைப் புகழ் வாய்ந்த பெஞ்சமின், தான் அனுப்பிய சுற்றறிக்கை ஒன்றில் ‘மனித சமூகத்தின் நண்பன் ஜேம்ஸ் குக், அவர் எல்லோருக்கும் பொதுவான மனிதர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் பிரிட்டனும் எதிர் துருவமாக போரிட்டுக் கொண்டிருந்த நேரம் அது. பேரறிவுக்கு கிடைக்கும் பெரும் மதிப்பு அது.
பதினாறு பெற்ற பெருமகன்
நவம்பர் 7-ந் தேதி 1728-ம் வருடம் இங்கிலாந்தின் யார்க்ஷையர் மாகாணத்தில் மார்த்டன் என்னும் இடத்தில் ஜேம்ஸ் குக் பிறந்தார். ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க’ என்னும் ஆசி ஜேம்ஸ் குக்கின் தந்தைக்குத்தான் மிகப்பொருத்தம்.
ஜேம்ஸின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 16 பேர். ஜேம்ஸ் இரண்டாவது குழந்தை. மெழுகுவர்த்தி தயாரித்து விற்பதுதான் அவரது தந்தையின் தொழில். குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. பள்ளிப் படிப்பெல்லாம் அவர்களுக்கு கனவாய்ப் போனது. ஜான் வாக்கர் என்னும் நிலக்கரி ஏற்றி இறக்கும் தொழில் செய்த நபரிடம் துறைமுகத்தில் தனது 17-வது வயதில் வேலைக்கு சேர்ந்தார் ஜேம்ஸ். அவரிடம்தான் கப்பல்கள் குறித்தும், கடற்பயணங்கள் குறித்தும் ஜேம்ஸ் அறிந்து கொண்டார்.
பால்டிக் கடற்பகுதிக்கு கடைநிலை ஊழியராக வணிகக்கப்பல் ஒன்றில் பயணம் சென்றவர், படிப்படியாக கப்பலின் தலைமை பொறுப்பு வரை அடைந்தார். துல்லியமாக திசையறிதல், அவற்றைக் கொண்டு வரைபடங்களை உருவாக்குதல் ஆகியன அவரது தனிச்சிறப்பு. ஜேம்ஸ் குக் உருவாக்கிய வரைபடங்கள் இன்னமும் பயன்பாட்டில் உள்ளன.
ஹவாய்த் தீவுகளை உலகின் கண்களுக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். அதுபோல ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தைக் கண்டறிந்தவரும் இவர்தான். உலகை இரண்டு முறைச் சுற்றி வந்தவர் ஜேம்ஸ் குக்.
கப்பலின் பல பொறுப்புகளில் ஜேம்ஸ் பதவி வகித்தாலும் கேப்டன் என்னும் பதவியை அடைந்ததும் அதுவரை வணிகக்கப்பலில் பயணித்தவர், பிரிட்டனின் கப்பற்படையில் தானாக முன்வந்து 1755-ம் ஆண்டு சேர்ந்தார்.
பிரெஞ்சுப் படைக்கு எதிராக கியுபெக் நகரில், புனித லாரன்ஸ் நதிக்கரையில் நடந்த யுத்தத்தில் கலந்துகொண்டு சுமார் ஏழு ஆண்டு காலம் களத்தில் இல்லை... இல்லை... கடலில் பிரிட்டனின் கப்பற்படையில் பணியாற்றினார். அந்தப்போரில்தான் பிரெஞ்சிடமிருந்து லூயிஸ்பர்க் துறைமுகத்தினை கைப்பற்றினார்.
மீகாமனின் அறிவியல் பயணம்
பிரிட்டனின் ராயல் சொசைட்டி, கடற்பயணத்தில் புதிய இடங்களை கண்டுபிடிக்கவும் புதிய ஆய்வுகளை செய்யவும் விரும்பியது. அதற்காக அவர்கள் ஜேம்ஸ் குக்கை நியமித்தனர். இதனால், ஜேம்ஸ் குக் கடற்படையிலிருந்து விலகி தனக்கு அளிக்கப்பட்ட எச்.எம்.எஸ். எண்டோவர் கப்பலில் 1768-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டார்.
வெள்ளிக் கோளானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் நிகழ்வை ‘ட்ரான்சிட் ஆப் வீனஸ்’ என்பார்கள். இந்த அரிய நிகழ்வு 250 ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தாகிதித் தீவில் தெரியும் என்பதால் அது குறித்து பதிவு செய்ய அங்கே புறப்பட்டார் ஜேம்ஸ் குக்.
ஆக உலக வரலாற்றில் அறிவியல் நோக்கத்துக்காக திட்டமிடப்பட்ட முதல் பயணம் அதுதான். 1769-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந் தேதி தாகிதித் தீவில் இறங்கினார். திட்டமிட்டபடி வீனஸ் கோள் நகர்ந்து வரும் நிகழ்வைப் பற்றி பதிவு செய்தார். அத்துடன் தனது பயணத்தை முடிக்காமல் பசிபிக்கின் தென் கிழக்குப் பகுதியில் கப்பலை செலுத்தி நியூசிலாந்து சென்றடைந்தார்.
அதுவரை பயணித்த கடல் வழிப் பாதையின் வரைபடத்தை வரைந்தார். பசிபிக்கின் கிழக்குப் பாதையின் பயணத்துக்கு அவரது அந்த வரைபடம்தான் இன்னமும் பயன்பாட்டில் இருக்கிறது.
அதன் பிறகு பசிபிக்கின் மேற்கு கரையோரம் சென்று பிரஷ் தீவில் இறங்கினார். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியான நியூ சவுத் வேல்சின் ஒரு பகுதிதான் அது. அவர்தான் அங்கு கால் பதித்த முதல் பயணி.
அடுத்து அவர் பயணித்த இடம் தாவரவியல் விஞ்ஞானிகளுக்கு பெரும் விருப்ப தலமாக அமைந்த ஸ்ட்ரிங் ரே வளைகுடா என்றழைக்கப்பட்ட ‘பாட்டனி பே’ என்னும் இடமாகும்.
தட்டையான உடலமைப்பும் சிறிய வாலும் கொண்ட திருக்கை மீன்கள் அதிகம் நிறைந்துள்ள இடம் என்பதால் ‘ஸ்ட்ரிங் ரே பே’ என்னும் பெயரை ஜேம்ஸ் குக் தான் வைத்தார். அதன் நிலப்பகுதியில் வளர்ந்திருந்த தாவரங்கள் அபூர்வமானதாகவும், மருத்துவ குணங்கள் நிரம்பியதாகவும் இருந்ததால் ‘பாட்டனி பே’ என்று பெயரை மாற்றியவரும் ஜேம்ஸ்தான்.
அவர் அப்படி அடையாளப்படுத்தியதால்தான் தாவரவியல் ஆய்வாளர்கள் பலர் அங்கு சென்று பல புதிய தாவரங்களைப் பற்றி ஆய்வு செய்ய முடிந்தது. அப்படி சென்ற தாவரவியல் அறிஞர்களில் ஜோசப் பாங்க்ஸ் மற்றும் டேனியல் சொலண்டர் ஆகியோர் முக்கியமானவர்கள். கிட்டத்தட்ட 3000 புதிய தாவர வகைகளை ஜோசப் பாங்க்ஸ் அங்கு கண்டறிந்தார். இன்றைய சிட்னி விமானதளம் இங்குதான் அமைந்துள்ளது.
க்வேகள் எனப்படும் ஆஸ்திரேலிய பழங்குடி இன மக்கள் பற்றி இன்று உலகம் அறிய ஜேம்ஸ் தான் காரணம். அங்கிருந்து கிளம்பிய ஜேம்ஸ் டச்சுத் துறைமுகமான படாவியாவில் (இன்றைய ஜகார்த்தா) உள்ள பவளப்பாறைகள் மீது மோதியதால் அவரது கப்பல் சிறிது சேதாரமானது. கப்பலில் ஏற்பட்ட துளை காரணமாக தண்ணீர் உள்புகுந்தது.
ஜேம்ஸ் குக் மிக சாமர்த்தியமாக அங்கு கிடைத்த ஒரு வகை களி மண்ணை உருட்டி காயவைத்து அந்தத் துளையை அடைத்து அதன் மேல் நாணல்களை நுழைத்து மீண்டும் தண்ணீர் வரமுடியாத அளவு சரி செய்துவிட்டார். சுமார் ஏழே வாரங்களில் இந்த ஆச்சரியகரமான பணியை செய்து முடித்து பயணத்தைத் தொடர்ந்தார்.
டாரஸ் நீரிணை வழியாக குயின்ஸ்லாந்து சென்றடைந்தார். பிறகு பிரிட்டன் திரும்பிய போது அவர் அறிவியல் அறிஞர்களால் மதிப்பிற்குரிய கதாநாயகனாக பார்க்கப்பட்டார்.
நோயை வென்ற நாயகன்
அவரது இரண்டாவது பயணம் பனிப்பொழிவுகள் கொண்ட அண்டார்டிக் பிரதேசத்தை நோக்கி அமைந்தது. மிகக்கடினமான இந்தப் பயணத்தில் தெற்கு ஜார்ஜியா மற்றும் சான்ட்விச் தீவு என்று அவர் பெயர் சூட்டிய பகுதிகளுக்கு சென்றார்.
அவரோடு பயணித்த பலருக்கும் ‘ஸ்கர்வி’ எனப்பட்ட ஒருவகை கரப்பான் நோய் ஆட்கொண்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் கடல் பயணிகளை அச்சுறுத்திய நோய் அதுதான். முதலில் பற்களின் ஈறுகள் வழியே ரத்தம் கசியும். பின்னர் தோல் பகுதிகளில் ஒரு வகை அரிப்பு தோன்றும். உடல் முழுதும் பரவி மரணத்தை தந்துவிடும்.
வைட்டமின் சி குறைபாட்டினால் வரும் இந்த நோயோடு போராடுவதுதான் பல கடற்பயணிகள், கப்பற்படை வீரர்களுக்கு பெரும் சவாலான விஷயமாக இருந்தது. ஜேம்ஸ் குக் அதற்கென ஒரு மருந்தை தயாரித்தார். எலுமிச்சைப் பழம், உப்பு தடவிய புளித்த முட்டைக்கோஸ் ஆகியவற்றால் உருவான உணவை எல்லோருக்கும் கட்டாயமாக்கினார்.
அந்தப் பயணத்தில் ஸ்கர்வி நோயால் ஒருவரைக் கூட இழக்காமல் வெற்றிகரமாக திரும்பியமைக்காக ‘கோப்லே பதக்கம்’ வழங்கி கவுரவிக்கப்பட்டார். அதைப்போல ஜான் ஹாரிசான் உருவாக்கிய துல்லிய நேரங்காட்டியான குரோனாமீட்டரை பயன்படுத்திய முதல் கடற்பயணமும் இதுதான்.
அவரது மூன்றாவது பயணம் அவரது வாழ்வின் முடிவுப் பயணமாகவும் அமைந்துவிட்டது. மனிதர்கள் வானளவுக்கு கொண்டாடப்படுவதும் பின்னர் தரையோடு தரையாக கீழ் தள்ளப்படுவதும் எல்லா காலத்திலும் நிகழக்கூடிய ஒன்றுதான். இந்தப் பயணத்தில் ஸ்பெயினின் அல்டா கலிபோர்னியா சென்றார். ஜுவான் டி பூகா நீரிணை வழியாக வான்கூவர் தீவை அடைந்தார். பின்னர் பெரிங் நீரிணை வழியாக ஹவாய் தீவிற்கு சென்றார்.
அந்தத்தீவுக்கு அவர் வைத்த பெயர் சான்ட்விச் தீவு. ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் இறைச்சியை வைத்தது போல அதன் அமைப்பு இருந்ததால் அந்தப் பெயரை வைத்தார்.
துளிராக தோன்றி சருகாக காய்ந்து..
ஹவாய் தீவில் அவர் இறங்கியபோது உள்ளூர் பழங்குடி மக்கள் தங்கள் இஷ்ட தெய்வமான லோனோவை வணங்கும் விதமாக ஒரு விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயம் மிகச்சரியாக அவர் அங்கு சென்றதால் அவர்களது நிறம், உடை, வைத்திருந்த ஆச்சரியமான, அழகிய பொருட்கள், உணவுப் பதார்த்தங்கள் ஆகியன அவர்களுக்கு லோனோவின் வடிவமாக ஜேம்ஸ் குக்கை நினைக்க வைத்தது. அவரை அவர்கள் கொண்டாடினார்கள்.
ஜேம்ஸ் குக்கும் அவர்களோடு இணக்கமாகவே இருந்தார். அவர்களை அடிமையாக்குவதோ தொல்லைப்படுத்துவதோ அவரது நோக்கமாக இல்லை.
ஜேம்ஸ் உடன் வந்தவர்களில் ஒருவர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். ஹவாய்த் தீவுவாசிகளுக்கு அது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவரை அவர்களை மரணம் தீண்டாத தெய்வப்பிறவிகள் என்றே நினைத்திருந்தனர். அவர்களும் சாதாரண மனிதர்களே என்கிற உண்மை அவர்கள் எதிர்பாராதது. அதன்பிறகு அவர்களின் அணுகுமுறை வேறாக இருந்தது.
ஜேம்ஸ்சின் படகுகளில் ஒன்று திடீரென காணாமல் போனது. ஜேம்ஸ் இது உள்ளூர் மக்களின் வேலையாக இருக்கும் எனக்கருதினார். இது பற்றி விசாரிக்க அவர்களின் அரசன் கலானி ஒபுவை கிட்டத்தட்ட கடத்தி வந்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று அவர் உணர்வதற்குள் தீவுவாசிகள் கொந்தளிப்புக்கு உள்ளாகிவிட்டனர்.
ஜேம்ஸ் குக் தனது தவறை உணர்ந்து கலானியை திரும்ப அவர்களிடம் ஒப்படைக்க செல்கையில் அவரை கல்லாலும், (அவர் ஏற்கனவே அவர்களுக்கு பரிசளித்திருந்த) கத்தியாலும் அவரைத் தாக்கி கொன்றுவிட்டனர். அவரோடு உடன் வந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அவரது உடலை ஒரு அரசனின் உடலை அடக்கம் செய்வது போல் அவர்களது பாரம்பரிய வழக்கப்படி மரியாதையோடு இருகைகளிலும் கடல் உப்பை வைத்து, உடலெங்கும் நறுமண பூச்சுக்கள் பூசி அடக்கம் செய்தனர்.
அப்படியாக அவரது வாழ்க்கைப் பயணம் ஐம்பதாவது வயதில் முடிவுக்கு வந்தது. அவசரமாக அவர் எடுத்த முடிவு அவருக்கே தீங்கானது.
அறிவியல் உலகுக்கும் தாவரவியலுக்கும் அவர் அளித்த மகத்தான பங்கு இன்றைக்கும் நினைவு கூறப்படுகிறது.
அவரது பெயர் ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டிருக்கிறது. அவரது சிலைகள் ஹவாயிலும் பிரிட்டனிலும் நிறுவப்பட்டிருக்கின்றன. அவரது ஆய்வுப் பொருட்கள் நியூ சவுத் வேல்சில் வைக்கப்பட்டுள்ளன. சில பிரிட்டனின் ராயல் சொசைட்டியில் வைக்கப்பட்டுள்ளன.
பெஞ்சமின் பிராங்க்ளின் சொன்னது போல ஜேம்ஸ் குக் மனித சமுதாயத்துக்கு பொதுவானவர்.
உலகின் வணிகமயமாக்கப்பட்ட முதல் படகு போக்குவரத்து
படகு, தோணி, கப்பல் போக்குவரத்து என்பது கட்டண அடிப்படையில் இன்று வழக்கமாக இருந்தாலும், அது வணிக மயமாக்கப்பட்டது இங்கிலாந்தில்தான். எல்லா நாட்டிலும் கடற்படை, கப்பல் போக்குவரத்து இருந்தது. ஆனால் அவை யாவும் அரசர்களின் தேவை பொருட்டே இயங்கின.
முதன் முதலாக பொது மக்கள் கட்டணம் செலுத்தி பயணிக்கும் முறை இங்கிலாந்தில் பிரிக்கன்ஹெட் நகருக்கும் லிவர் பூல் நகருக்கும் இடையே ஓடும் மெர்சி ஆற்றில்தான் நடைமுறைக்கு வந்தது.
1330-களில் பெனிடிக்டின் துறவிகள் தங்கள் தேவைகளுக்காக பிரிக்கன் ஹெட்டில் இருந்து லிவர்பூல் நகருக்கு செல்ல படகுகளை பயன்படுத்தினர். பின்னர் பொது மக்களுக்கும் அந்த வசதி தேவைப்பட்டதால் அதனைக் கட்டணம் செலுத்தி பயணிக்கும் முறைக்கு அரசின் அனுமதியோடு இயக்கினர். எனவே அதுதான் முதல் கட்டண படகு போக்குவரத்து துறையாக இருக்கும்.
இது வேறு காலா...
‘காலா’ அல்லது ‘காலே’ என அழைக்கப்பட்ட நாடோடி குழுவினர், ரோமன் குடியரசில் வாழ்ந்த ஜிப்சிகள். இவர்கள் பெரும்பாலும் இலக்கில்லாமல் நாடு விட்டு நாடு பயணிக்கின்ற பழங்குடி மக்கள்.
ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி என்று பரவி கிடக்கும் ஜிப்சி இனத்தவர்கள் இவர்கள். பொதுவாக ஆடு மேய்ப்பது இவர்களது தொழில். சென்ற இடங்களில் கிடைக்கின்ற வேலைகளை நேர்மையாக செய்து உழைத்து பிழைக்கும் இயல்பினர். திருட்டு, பொய், ஏமாற்றுவது இவர்களது இயல்பில் அறவே வெறுக்கப்பட்ட குணங்கள்.
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதிக்கு இவர்கள் குடியேறிய போது இவர்களது நேர்மையான பண்பிற்காக இவர்களை தங்களது விவசாயத்திற்கு அங்குள்ளவர்கள் விரும்பி பணியமர்த்துவார்கள். தங்களது குழுவில் இருந்த இருவர் தெரியாமல் ஆடு திருடிய குற்றம் அறிந்து அதற்காக அவர்களை தூக்கிலிட்டனர். அத்தனை நேர்மையானவர்கள்.
இன்று வேல்ஸ் ரோமானிய இனம் என்கிற ஒன்று அங்கு புதிதாக தோன்றிவிட்டது. இவர்கள் பேசும் மொழியில் 60 சதவீதம் சமஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன என்பது ஆச்சரியமான செய்தி.
ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி, கிரேக்க, ஜெர்மனி, ரோமானியன், வேல்ஸ் ஆகிய மொழிச் சொற்களை நாற்பது சதவீதம் பயன்படுத்துகிறார்கள். இப்பொழுதும் இவர்களில் ஓரிடம் தங்காமல் வாழ்க்கை முழுக்க பயணித்துக் கொண்டே இருப்பவர்களும் உள்ளனர்.