மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்குமா? சீமான் கேள்வி

ஆண்டுக்கு 1.80 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். எனவே மதுக்கடைகளை அரசு மூட நடவடிக்கை எடுக்குமா? என்று ஓமலூரில் சீமான் கேள்வி எழுப்பினார்.

Update: 2018-07-12 23:21 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி சட்டூரில் விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் 8 வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த மே மாதம் 12-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அரசுக்கு எதிராகவும், அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி ஓமலூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில் சேலம் செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்ற சீமான், நேற்று ஓமலூர் கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து மறு உத்தரவு வரும்வரை அவர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி காலை 10 மணிக்கு கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 8 வழி சாலை மக்களுக்காக போடப்படுகிறதா? மக்கள் இந்த சாலை வேண்டாம் என்றுதான் போராடி வருகின்றனர். 10 ஆண்டுகளில் வாகன போக்குவரத்து உயர்ந்துவிடும் என்கின்றனர். அவ்வாறு கூறுபவர்கள் உணவு, தண்ணீர் தேவைக்கு என்ன திட்டம் வைத்துள்ளனர்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே பல சாலைகள் உள்ளன. அப்படி இருக்க இந்த 8 வழி சாலையில் வேகமாக சென்னைக்கு போய் என்ன செய்ய போகிறீர்கள்? இந்த சாலைகள் யாருக்காக போடப்படுகிறது? பெரும் முதலாளிகளுக்காக போடுகின்றனர். மக்கள் பணத்தில் சாலை போட்டு, அதற்கும் சுங்கம் வசூல் செய்கின்றனர். கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர். ஆனால் மக்கள் வேண்டாம் என கூறுவதற்கு மதிப்பளிக்கிறார்களா? நிலத்தை கொடுக்கமாட்டோம் என்று மனு கொடுத்தால் மதிப்பளிக்கிறார்களா? மக்கள் தானாக வந்து நிலத்தை கொடுக்கிறார்கள் என்கிறார். முதல்-அமைச்சர். அவர் மக்களை சந்தித்தாரா?

இரண்டாயிரம், மூவாயிரம் பள்ளிகளை மூடுகிறது அரசு. எச்.ராஜா, ஆண்டுக்கு 13 ஆயிரம் பேர் விபத்தால் இறப்பதால்தான் சாலை போடுவதாக கூறுகிறார். மதுக்கடைகளால் ஆண்டுக்கு 1.80 லட்சம் பேர் சாகிறார்கள். இதை மூட அரசு நடவடிக்கை எடுக்குமா?.

வளர்ச்சி என்பது, தாய்லாந்தில் மாணவர்கள் 13 பேர் குகையில் சிக்கிக்கொண்டனர். அவர்களை ஒரு வாரத்தில் உயிர்சேதம் இன்றி மீட்டனர். ஆனால் இங்கு குரங்கணி மலையில் பிடித்த தீ ஒருவாரம் எரிந்தது. கடலில் எண்ணெய் கொட்டினால் வாளி கொண்டு அள்ளுகின்றனர். இவர்கள் வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

முன்னதாக சீமான் ஓமலூர் வந்ததையொட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்