மாணவிகளை கேலி செய்பவர்களை ஒடுக்க சிறப்பு தனிப்பிரிவு

மாவட்ட காவல்துறை சார்பில் மாணவிகளை கேலி செய்யும் ரோமியோக்களை ஒடுக்க சிறப்பு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-07-12 23:30 GMT
ராமநாதபுரம்,

மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலிசெய்வதை தடுக்கும் வகையில் சிறப்பு தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கேலி செய்தல் தடுப்பு பிரிவு என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரிவில் ஒவ்வொரு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டிலும் தலா ஒரு ஆண், பெண் போலீசார் நியமிக்கப்பட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் ரோந்து சுற்றி ரோமியோக்களை ஒடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி கேலி செய்தல் தடுப்பு பிரிவினை ராமநாதபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறைகள் முடிந்து மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவிகளை சிலர் கேலி செய்வதாக தொடர் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து சுற்றி வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், மாணவிகளுக்கு அச்ச உணர்வினை தடுக்கும் வகையிலும், பாதுகாப்பு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நிரந்தரமாக காலை, மாலை வேளைகளில் ரோமியோக்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.


மாணவிகளை கேலி செய்யும், தொந்தரவு செய்யும், சமூக வலைதளங்கள் மூலம் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் ரோமியோக்களை இந்த தனிப்பிரிவு போலீசார் சீருடையிலும், சீருடை அணியாமலும் கண்காணித்து முதலில் எச்சரிக்கை செய்வார்கள். அதன்பிறகும் தொடர்ந்து கேலி நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோரை அழைத்து விவரங்களை எடுத்துக்கூறி எச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இறுதியாக குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்படுவார்கள்.

வாக்கி டாக்கியுடன் பணியில் ஈடுபடும் இந்த பிரிவு போலீசாரிடம் மாணவிகள் தைரியமாக புகார் செய்யலாம். இந்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இதுதவிர, 100 எண்ணிலும், ஹலோ போலீஸ் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் செய்தால் சில நிமிடங்களில் அங்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள். மாநிலத்தில் முதல் முறையாக ரோமியோக்களை ஒடுக்க தனிப்பிரிவு ஏற்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், லிங்கபாண்டி, ஜெயக்குமார், திவாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்